கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழாவினை சிறப்பிக்கும் வகையில் மனைப்பட்டா வழங்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கினார்.
இதில் சிறப்பு அழைப்பாளராக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கலந்து கொண்டு குறிஞ்சிப்பாடி வட்டத்தில் மனையற்ற ஏழை, எளிய மக்கள் நத்தம் குடியிருப்பு பகுதியில் நீண்ட நாட்களாக குடியிருந்து வந்து தகுதியான பயனாளிகளை தேர்வு செய்து மனைப்பட்டா ஆணையையும் ஆதிதிராவிட நலத்துறை மற்றும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மூலம் ஒதுக்கப்பட்டு கிராம ஆவணங்களில் உரிய திருத்தங்கள் செய்யாமல் பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த பயனாளிகளுக்கு கணினி வழியே மனைப் பட்டா குறிஞ்சிப்பாடி குறுவட்டங்களில் உள்ள 42 கிராமங்களில் தகுதியான 1004 பயனாளிகளுக்கு 6 கோடியே 68 லட்சம் மதிப்பீட்டில் மனைப் பட்டாவிற்கான ஆணையை வழங்கினார்.
அப்போது அவர், தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றதிலிருந்து பல்வேறு திட்டங்களை மக்களுக்காக செயல்படுத்தி வருகிறார். இதில் மகளிர் உரிமை திட்டம், பெண்களின் உயர்கல்வியை ஊக்குவிக்கும் பொருட்டு உயர்கல்வியில் பயிலும் மாணவிகளுக்கு மாதம் 1000 வழங்கும் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி புதுமைப்பெண் திட்டத்தினை கடந்த 2022 செப்டம்பர் 5ஆம் தேதி தொடங்கி வைத்தார். இதில் தற்போது கடலூர் மாவட்டத்தில் 10,395 மாணவிகள் பயன்பெற்று வருகின்றனர். இவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சரின் வாழ்த்து மடல் வழங்கப்பட்டுள்ளது” என பேசினார்.
இதேபோல் வேப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் கலந்துகொண்டு 1798 பயனாளிகளுக்கு 12 கோடியே 39 லட்சத்து மதிப்பிலான இலவச வீட்டு மனை பட்டா மற்றும் இ பட்டாவிற்கான ஆனையை வழங்கினார்.