Skip to main content

விருத்தாச்சலம் அருகே தனியார் பள்ளியின் சொத்துக்களை அபகரிக்க அமைச்சரின் மகன், மகள் முயற்சி : பள்ளியின் தலைவர் குற்றச்சாட்டு

Published on 06/07/2019 | Edited on 06/07/2019

விருத்தாச்சலம் அடுத்த பெரியவடவாடி கிராமத்தில் செந்தில் கல்வி அறக்கட்டளை என்ற பெயரில் பள்ளிக்கூடம் மற்றும் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு சுமார் 1700 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.  விருத்தாசலத்தைச் சேர்ந்த டாக்டர் இளவரசன் பள்ளியின் அறக்கட்டளை தலைவராக  இருந்து வரும் நிலையில் நேற்று முன்தினம் மாலையில் அமைச்சர் எம்.சி.சம்பத்தின், ஆதரவாளர்கள் சிலர் பள்ளிக்கூடத்திற்குள்  அத்துமீறி நுழைந்து அலுவலகத்தின் பூட்டை உடைத்து, அலுவலகத்தில் இருந்த பொருட்களை சேதப்படுத்தி விட்டு அங்கிருந்த ஊழியர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றியதாக கூறப்படுகிறது. 

private school


இந்நிலையில் இதுகுறித்து அறிந்த பள்ளியின் தாளாளர் டாக்டர் இளவரசன் ஆதரவாளர்கள் பள்ளிக்கூடத்திற்குள் திரண்டு வந்ததால் அமைச்சர் எம் சி சம்பத்தின் ஆதரவாளர்கள் பள்ளியை விட்டு வெளியேறி விட்டனர். இந்நிலையில் நேற்று காலையில் அமைச்சர் எம். சி சம்பத்தின் ஆதரவாளர்களான விருத்தாச்சலம் அதிமுக நகர செயலாளர் சந்திரகுமார், ஒன்றிய செயலாளர் பாலதண்டாயுதம் உள்ளிட்டவர்கள் பள்ளிக்கூடத்திற்கு வந்தனர். அப்போது டாக்டர் இளவரசன் ஆதரவாளர்களும் பள்ளிக்கூடத்தில் இருந்ததால் இரு தரப்பினருக்கும் இடையே பிரச்சினை ஏற்படும் சூழ்நிலை உருவானது. பின்னர் இருதரப்பினரும் அமர்ந்து பேசி அமைச்சர் சம்பத்திடம் பேசி முடிவெடுப்பது குறித்து ஆலோசித்தனர். இதனால் அப்பகுதியில் விருதாச்சலம் உதவி போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யா தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். இந்நிலையில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டால் கைது செய்து கொண்டு செல்வதற்காக அரசு பஸ்சும்  பள்ளிக்கூட வளாகத்துக்குள் வந்து தயார் நிலையில் நின்றது. 

 

private school


இச்சம்பவம் குறித்து டாக்டர் இளவரசனும், அமைச்சர் எம்.சி.சம்பத்தும் தொலைபேசி வாயிலாக பேசி கொண்டனர்.  அப்போது அமைச்சர் எம்.சி.சம்பத் சட்டசபை கூட்டத்தொடர் முடிந்ததும் இது குறித்து பேசி தீர்த்துக் கொள்ளலாம் என்று கூறி விட்டதாக கூறப்படுகிறது. இதனால் இரு தரப்பினரும் பள்ளியை விட்டு கலைந்து சென்றனர். 

private school


இந்நிலையில் இது குறித்து பள்ளியின் தலைவர் டாக்டர் இளவரசன் செய்தியாளர்கள் சந்திப்பின்போது கூறியதாவது- செந்தில் அறக்கட்டளை கல்வி குழுமம் 2005 -2006ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளி கல்லூரிகளை நல்ல முறையில் நடத்தி வருகிறேன். சுமார் 1700 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். பள்ளிக்கூடத்திற்கு 70 ஏக்கர் நிலம் மற்றும் 100 கோடி மதிப்பிலான சொத்துக்கள் உள்ளன. இந்தப் பள்ளிக்கும், அமைச்சர் எம்.சி. சம்பத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இதனை அபகரிப்பதற்காக அமைச்சர் எம் சி சம்பத்தின் மகள் திவ்யா, மகன் பிரவீன் ஆகியோர் சொத்துக்களை அபகரிப்பதற்காக அடியாட்களை வைத்து மிரட்டுகின்றனர்.

private school

நேற்று முன்தினம் இரவு அமைச்சர் சம்பத்தின் ஆதரவாளர்கள் பள்ளிக்கூடத்தின் அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்து அலுவலகத்தை சேதப்படுத்தி அங்கிருந்த ஊழியர்களை துரத்திவிட்டனர். மேலும் நேற்று காலையில் பள்ளிக்கு முன்பு 100-க்கும் மேற்பட்ட போலீசாரை குவித்து, பயமுறுத்தி இந்த பள்ளியை அபகரிக்க முயற்சிக்கின்றனர். இதுகுறித்து அமைச்சர் எம்.சி. சம்பத் தொலைபேசி வாயிலாக சட்டசபை கூட்டத் தொடர் நடந்து கொண்டிருப்பதால், பிறகு இதுபற்றி பேசிக் கொள்ளலாம், என்று கூறிவிட்டார். இவ்வாறு டாக்டர் இளவரசன் செய்தியாளர்களிடையே தெரிவித்தார். 

இந்நிலையில் அமைச்சர் எம்.சி. சம்பத்தின் ஆதரவாளர்களுக்கும் பள்ளியின் தலைவர் டாக்டர் இளவரசன் ஆதரவாளர்களுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு சட்ட ஒழுங்கு பாதிக்கப்படும் சூழ்நிலை உருவானதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இச்சம்பவத்தால் பள்ளியில் நடந்த சிறப்பு வகுப்பிற்கு வந்த மாணவர்கள் கல்வி கற்க முடியாமல் அவதி அடைந்தனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்