தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டியுள்ள இந்தியப் பெருங்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது வலுவடைந்து வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழகம், புதுச்சேரி நோக்கி வரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் நேற்று முன்தினம் அறிவித்திருந்தது. 10, 11, 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் தமிழகத்தின் பல மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை மற்றும் மிகக் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் நேற்று முன் தினம் முதல் பெய்து வந்த தொடர் மழை இன்று நின்றுள்ளது. நேற்றிரவு முழுக்க சென்னையில் பெய்த தொடர் மழையின் காரணமாக சில இடங்களில் தண்ணீர் தேங்கி நின்றது. அதனை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் ஆய்வு செய்தனர். அந்த வகையில் கோடம்பாக்கம் மண்டலம், வார்டு 142, சைதாப்பேட்டை திவான் பாஷ்யம் தோட்டம் மற்றும் அடையாறு மண்டலம், வார்டு 172, மசூதி காலனி பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்கள். இந்த ஆய்வுகளின் போது சென்னை மேயர் பிரியாவும் உடனிருந்தார்.