காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் புதிய இரண்டாவது விமான நிலையம் அமைக்க ஏற்பாடுகள் நடந்து வருகிற நிலையில் பரந்தூர் மட்டுமல்லாது அதனைச் சுற்றியுள்ள சில கிராமங்களிலிருந்தும் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு புதிய விமான நிலையம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பு வெளியான நாள் முதல் தொடர்ந்து பரந்தூர் மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். அண்மையில் கூட சுற்றுவட்டார கிராம மக்கள் 'விவசாயத்தை அழித்து விமான நிலையமா?' என்ற பதாகைகளுடன் கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள். இந்நிலையில் விமான நிலையத்துக்காக நிலம் கையகப்படுத்துவதை எதிர்த்து ஏகனாபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள 16 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் இன்று காலையில் கூட கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி பேரணியாகச் சென்றார்கள்.
இந்த விவகாரம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இதுதொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பதற்காக அமைச்சர்கள் குழு நாளை பரந்தூர் செல்ல உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அமைச்சர்கள் எ.வ.வேலு,தங்கம் தென்னரசு, தா.மோ.அன்பரசன் உள்ளிட்ட குழுவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளார்கள். இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் பாதுகாப்புப் பணியில் காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.