அண்மையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “டெங்கு, மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது, ஒழித்துக் கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனமும். சொந்த மாநில மக்களை இரண்டு குழுக்களாகப் பிரித்து கலவரத்தை மூட்டி உள்ளார்கள். இதுதான் சனாதனம். சனாதனத்தை எதிர்ப்பதை விட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் காரியம்” எனக் கூறியிருந்தார். இது இந்திய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், உதயநிதியின் பேச்சுக்கு பாஜக மற்றும் இந்துவா அமைப்புகள் கடும் எதிர்வினையாற்றி வரும் வேளையில், பலரும் அவருக்கு ஆதரவும் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் அமைச்சர் உதயநிதியின் சமூக வலைத்தளப்பதிவு வைரலாகி வருகிறது. அமைச்சர் உதயநிதி கொசுவர்த்தியின் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். ஆனால் அவர் எதையும் குறிப்பிடாமல் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளதால் இணைய வாசிகள் பல்வேறு யூகங்களில் கதை எழுதி வருகின்றனர். அதில், சமீபத்தில் சனாதனம் குறித்து டெங்கு, மலேரியா போன்று சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும் என்று கூறியிருந்ததைச் சுட்டிக்காட்டி, சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்ற ரீதியில் தான் அவர் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார் என்றும், மேலும், சனாதன சர்ச்சைகள் குறித்து அவருக்கு எதிராகக் கருத்து தெரிவிப்பவர்களுக்கு சினிமாவில் வரும் கவுண்டமணி காமெடி காட்சிகளைப் போல ‘நாராயணா இந்த கொசு தொல்ல தாங்க முடியலப்பா..’ என்ற ரீதியில் பதிலளிக்கத்தான் இப்படி புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார் என்றும் தெரிவித்து வருகின்றனர்.
இது ஒரு புறமிருக்க, இன்னும் சிலர், தமிழ்நாட்டில் டெங்கு பரவலால் நேற்று 4 வயது சிறுவன் உயிரிழந்த நிலையில், மக்கள் அனைவரும் டெங்கு காய்ச்சலில் இருந்து பாதுகாப்பாக இருக்கும்படி உதயநிதி கொசுவர்த்தி புகைப்படத்தைப் பகிர்ந்து அறிவுரை கூறியுள்ளார் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர். எது எப்படியோ, அமைச்சர் உதயநிதி பகிர்ந்த புகைப்படத்திற்கான உண்மை காரணம் அவருக்கு மட்டுமே தெரியும்.
pic.twitter.com/Xvud6n36J3— Udhay (@Udhaystalin) September 11, 2023