Skip to main content

“பெண்கள் யாரும் இதை தவறாக நினைக்கக்கூடாது...” - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

Published on 24/01/2023 | Edited on 24/01/2023

 

minister udhayanidhi stalin talk about eps and ops

 

சென்னை கொசப்பேட்டை சச்சிதானந்தம் தெருவில் கட்டப்பட்டிருந்த அண்ணா மாளிகையை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி நேற்று திறந்து வைத்தார். இவ்விழாவில் சென்னை கிழக்கு மாவட்டம் சார்பில் 9 ஜோடிகளுக்கு இலவச திருமணத்தையும் அமைச்சர் உதயநிதி நடத்தி வைத்தார். மேலும் அவர்களுக்கு திருமண சீர் வரிசைகளையும் வழங்கினார். 

 

அதன்பிறகு விழாவில் பேசிய அமைச்சர் உதயநிதி, “பொதுவாக இதுபோன்ற திருமண விழாக்களில் மணமக்களை வாழ்த்தி பேசும்போது, ‘கருணாநிதியும் தமிழும் போல...’ ‘மு.க.ஸ்டாலினும் உழைப்பும் போல...’ மணமக்கள் வாழ வேண்டும் என்று வாழ்த்துவார்கள். ஆனால் மணமக்கள் எப்படி வாழக்கூடாது என்பதற்காக நான் ஒரு உதாரணம் சொல்கிறேன். பெண்கள் யாரும் இதை தவறாக நினைக்கக்கூடாது. பெண்களிடம் அரசியல் பேசாமல் போகவே முடியாது. தமிழகத்தில் என்ன நடக்கிறது? என்று அனைவருக்குமே நன்றாக தெரியும். எனவே எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் போல வாழக்கூடாது. சுயமரியாதையை விட்டுக்கொடுத்து விடாதீர்கள். உங்களுக்கு எது வேண்டுமோ அதைக் கேட்டு பெற்றிடுங்கள்.

 

நான் சட்டசபையில் கூட பேசியிருந்தேன். ''எடப்பாடி பழனிசாமி அவர்களே... ஓ.பன்னீர்செல்வம் அவர்களே... நீங்கள் தவறுதலாக எனது காரில் ஏறிவிட்டீர்கள். எங்கள் காரை தாராளமாக எடுத்து செல்லுங்கள். நான் தவறாக நினைத்துக் கொள்ளமாட்டேன். ஆனால் கமலாலயம் மட்டும் செல்லவேண்டாம்'' என்று பேசினேன். அப்போது ஓ.பன்னீர்செல்வம் எழுந்து 'எந்த காலத்திலும் எங்கள் கார் அங்கே போகாது' என்றார். ஆனால் 2 பேரும் கமலாலயத்துக்கு போட்டிப்போட்டு சென்று 2 மணி நேரம் காத்திருக்கிறார்கள். இப்படிப்பட்ட எதிர்க்கட்சியாக இருக்கிறார்கள்? இதற்கு மேல் எதுவும் பேச விரும்பவில்லை” எனக் கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்