தமிழ்நாடு முழுவதும் தி.மு.க. மூத்த உறுப்பினர்கள், நிர்வாகிகளைப் பாராட்டி கவுரவிக்கும் வகையில் பொற்கிழி வழங்கப்பட்டு வருகிறது. மாவட்டம் தோறும் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டு இதற்கான விழா நடைபெற்று வருகிறது. அதன்படி தி.மு.க. ஈரோடு வடக்கு, தெற்கு மாவட்டங்களை ஒருங்கிணைத்து பொற்கிழி வழங்கும் விழா ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்துள்ள சரளையில் நேற்று(21.11.203) காலை நடந்தது. இதற்காக அங்கு பிரம்மாண்ட அரங்கு அமைக்கப்பட்டு இருந்தது.
நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தி.மு.க இளைஞரணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று காலை கோயம்புத்தூரில் இருந்து காரில் பெருந்துறைக்கு வந்தார். பெருந்துறை சுங்கச் சாவடியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு ஈரோடு தெற்கு மற்றும் வடக்கு மாவட்டம் சார்பாக அமைச்சர் சு.முத்துசாமி, வடக்கு மாவட்ட செயலாளர் நல்லசிவம் ஆகியோர் தலைமையில் நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதனைத் தொடர்ந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விழா நடைபெறும் பந்தலுக்கு வந்தார். அங்கு அமைக்கப்பட்டிருந்த புகைப்பட கண்காட்சியை அவர் ஆர்வமுடன் பார்வையிட்டார். விழா பந்தலில் இருந்த முன்னாள் முதல்- அமைச்சர் கருணாநிதியின் முழு உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதையடுத்து ஈரோடு ஒருங்கிணைந்த மாவட்ட தி.மு.க. மூத்த நிர்வாகிகள், உறுப்பினர்கள் 2500 பேருக்கு தலா ரூ.10 ஆயிரம் மதிப்பிலான பொற்கிழியை அமைச்சர் உதயநிதி வழங்கி கவுரவித்தார். தொடர்ந்து ஈரோடு ஒருங்கிணைந்த தெற்கு, வடக்கு மாவட்ட தி.முக இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் டிசம்பர் மாதம் சேலத்தில் நடைபெற உள்ள தி.மு.க. இளைஞரணி 2-வது மாநில மாநாடு ஏற்பாடுகள் குறித்தும், இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை உள்ளிட்டவை குறித்தும் நிர்வாகிகளுடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விரிவாக ஆலோசனை மேற்கொண்டார்.
இளைஞர் அணி செயல்வீரர்கள் கூட்டத்தை முடித்துக் கொண்டு அமைச்சர் உதயநிதி பெருந்துறை சிப்காட் பகுதிக்கு சென்றார். அங்கு ரூ.40 கோடி மதிப்பில் பொது சுத்திகரிப்பு நிலையம் அமைய உள்ள இடத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஏ.ஜி. வெங்கடாசலம் எம்.எல்.ஏ, தி.மு.க. இளைஞரணி மாநில துணைச் செயலாளர் கே.இ. பிரகாஷ், திமுக நெசவாளர் அணி மாநில செயலாளர் சிந்து ரவிச்சந்திரன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஜெ. திருவாசகம், திமுக இளைஞரணி ஈரோடு மாநகர துணை அமைப்பாளர் சீனிவாசன், டி.என். பாளையம் ஒன்றிய கழகச் செயலாளர் எம்.சிவபாலன், கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மாவட்ட அமைப்பாளர் சித்தோடு சி. எஸ். பிரகாஷ், ஒன்றிய கழகச் செயலாளரும், நம்பியூர் பேரூராட்சி மன்ற தலைவருமான மெடிக்கல் ப. செந்தில்குமார் உள்பட பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகை ஒட்டி நிகழ்ச்சி நடைபெற்ற 3 இடங்கள் மற்றும் அதன் வழித்தடங்களில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவின் பெயரில் ஏ.டி.எஸ்.பி.க்கள் மேற்பார்வையில் டி.எஸ்.பி.க்கள் தலைமையில் 600-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதே போல் 6 தீயணைப்பு வாகனங்கள் நிறுத்தப்பட்டு 20 தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் நிகழ்ச்சி நடக்கும் இடங்களில் வெடிகுண்டு சோதனை குழுவினரும் அங்குலம் அங்குலமாக சோதனையில் ஈடுபட்டனர்.