தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும், திமுகவின் முன்னாள் தலைவருமான கலைஞரின் 100வது பிறந்தநாளை திமுகவினர் இந்த வருடம் முழுக்க கொண்டாடி வருகின்றனர். கலைஞரின் 100வது பிறந்தநாளை முன்னிட்டு, வரும் 20ம் தேதி திருவாரூரில் கட்டப்பட்டுள்ள கலைஞர் கோட்டம் திறக்கப்படவுள்ளது. இதனை பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் திறந்துவைக்கிறார். இந்நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை ஏற்கிறார்.
திருவாரூர் அடுத்த காட்டூரில் 7 ஆயிரம் சதுர அடியில் ரூ.12 கோடி மதிப்பில் சென்னை தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் கலைஞர் கோட்டம் கட்டப்பட்டுள்ளது. இந்த கோட்டத்தில் 2 திருமண மண்டபங்கள், முத்துவேலர் நூலகம் மற்றும் கலைஞரின் முழு உருவ சிலை போன்றவை அமைக்கப்பட்டுள்ளது. மிகப் பிரம்மாண்டமாகத் திருவாரூர் தேர் போன்ற வடிவமைப்பில் இந்த கோட்டம் கட்டப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சி உட்பட திருவாரூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று திருவாரூர் சென்றுள்ளார். இதனைத் தொடர்ந்து விழாவில் பங்கேற்க அமைச்சர் உதயநிதியும் திருவாரூர் செல்கிறார். அப்போது செல்லும் வழியில் திருச்சி மரக்கடை பகுதியில் அமைந்துள்ள சையத் முதற்தசா மேல்நிலைப் பள்ளியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை உணவுத் திட்டத்தையும் பார்வையிட்டு உணவின் தரம் சரியாக இருக்கிறதா, மாணவர்களுக்கு சரியான அளவில் வழங்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்தார். உடன் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மாவட்ட கல்வி அலுவலர் சிவக்குமார் மற்றும் அரசு துறை அதிகாரிகள் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள அமைச்சர் உதயநிதி, “திருச்சி அரசு சையது முதுர்ஷா மேல்நிலைப்பள்ளியில் முதலமைச்சரின் காலை சிற்றுண்டித் திட்டத்தை ஆய்வு செய்ய சென்ற போது, முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் திறந்து வைத்த பள்ளிக் கட்டடம், என்.சி.சி அலுவலகம், கழிவறை உள்ளிட்ட இடங்களில் இன்று ஆய்வு செய்தோம். மாணவர்கள் மத்தியில் தேசிய கொடியை ஏற்றி வைத்து அவர்களுடன் கலந்துரையாடினோம். நம் திராவிட மாடல் அரசு மாணவர்களின் வளர்ச்சிக்கும் என்றும் துணை நிற்கும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.