தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில் திருவொற்றியூரில் வெள்ள நிவாரண பொருட்களை மக்களுக்கு வழங்கிய பின் செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, “2015 ஆம் ஆண்டு கனமழை காரணமாகத் துரித நடவடிக்கை எடுத்ததன் காரணமாக விரைந்து மக்களுக்கு மின்சாரம் கொடுத்தோம். ஆனால் தற்போது அப்படியில்லை. இந்த மாதிரி மழைக் காலங்களில் மக்களுக்கு மின்சாரம் தங்கு தடையில்லாமல் கிடைப்பதற்காகத்தான் தரையில் மின்சார ஒயரை பதித்து மின் இணைப்பு அளித்தோம். தற்போது மின்சாரம் தடையில்லாமல் கிடைப்பதற்கு நாங்கள்தான் காரணம். மழை வெள்ளம் காரணமாகச் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரியளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
புயல் வரும் என்று வானிலை மையம் எச்சரிக்கை கொடுத்தும் இந்த அரசாங்கம் மெத்தனமாக இருந்திருக்கிறது. அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததால் உணவு, பால், குடிநீர் பெரும்பாலான பகுதிகளில் கிடைக்கவில்லை” என்று தமிழக அரசு மீது குற்றச்சாட்டை வைத்திருந்தார். அதேபோல், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட அதிமுகவினர் தமிழக அரசு மீது குற்றச்சாட்டை வைத்திருந்தனர்.
இந்த நிலையில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்து நிவாரணப் பணிகளை செய்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “6 நாட்களாக நாங்கள் மக்களுடன்தான் இருக்கின்றோம். புயல் அடித்தபோதும் சென்னை மேயர், சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் என அனைவரும் களத்தில்தான் இருந்தோம். நாங்கள் எங்கள் பகுதியில் இருக்கக்கூடிய மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வழங்கி வருகின்றோம்” என்று கூறினார். அதனைத் தொடர்ந்து, எதிர்க்கட்சிகள் வைத்திருக்கும் குற்றச்சாட்டு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதில் அளித்த அவர், “நாங்கள் மக்களுடன் இருக்கிறோம். நாங்கள் ஒன்னும் வீட்டில் படுத்துக்கொண்டோ ஒளிந்துகொண்டோ இருக்கவில்லை. அதனால், அந்த கேள்வியை மக்களிடம் போய் கேளுங்கள்” என்று கூறினார்.