Skip to main content

“விமர்சனம் செய்தவர்கள் கூட பாராட்டினார்கள்” - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்

Published on 13/09/2024 | Edited on 13/09/2024
Minister Udayanidhi Stalin's pride about formlula 4 car race

இந்த ஆண்டுக்கான ஃபார்முலா 4 கார் பந்தயம் இந்தியாவில் 5 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதில் 2வது சுற்று போட்டி கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதி சென்னை தீவுத்திடலில் தொடங்கியது. அதன்படி, ஃபார்முலா 4 கார் பந்தய பயிற்சி போட்டி செப்டம்பர் 1ஆம் தேதி இரவு நடைபெற்று, தகுதி சுற்றுக்கான போட்டி 2ஆம் தேதி நிறைவடைந்தது. இந்த பந்தயத்தை ஏராளமான ரசிகர்களும், பிரபலங்களும் கண்டு ரசித்தனர். 

இந்த நிலையில், ஃபார்முலா 4 கார் பந்தயம் நடைபெற உறுதுணையாக இருந்த அரசுத்துறை பணியாளர்களுக்கு, சென்னை கலைவாணர் அரங்கில் பாராட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி இன்று (13-09-24) நடைபெற்றது. இதில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அதில் அவர் பேசியதாவது, “கார் பந்தயத்தை நடத்துவதில் இருக்கும் பெரிய சவால் போக்குவரத்து மேலாண்மை தான். வாகன நெரிசலும், மக்கள் நடமாட்டமும் மிகுந்த பகுதியில் இந்த கார் பந்தயம் நடத்தப்பட்டுள்ளது. இந்த பந்தயத்தின் போது போக்குவரத்து நெரிசல் ஏற்படும், அதனை படம்பிடித்து செய்தியாக்கி விடலாம் என நிறைய பேர் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தனர். போட்டியை எப்படியாவது நிறுத்திவிட வேண்டும் என்றெல்லாம் சில பேர் திட்டமிட்டார்கள். 

கார் பந்தயம் ஒரு புறம் நடந்துகொண்டிருந்தது. மறுபுறம் போக்குவரத்து சீராக இயங்கிக் கொண்டிருந்தது. அதனை பார்த்ததற்கு பிறகு, நம்மை விமர்சனம் செய்தவர்கள் கூட விமர்சனம் செய்வதற்கு எதுவும் இல்லாததால் பாராட்ட ஆரம்பித்துவிட்டனர். சிறிய விபத்து நடந்தால் கூட அதை ஊதி பெரிதாக்க காத்துக்கொண்டிருந்தார்கள். இன்னும் சொல்ல வேண்டுமென்றால், இரண்டு நாய்கள் ஓடி வந்துவிட்டது. அதை கூட விமர்சனம் செய்தார்கள். கார் பந்தயம் நடத்துகிறார்களா? நாய் பந்தயம் நடத்துகிறார்களா என விமர்சனம் செய்தார்கள். இந்த பந்தயம் பெரிய சிட்டிக்குள்ள நடத்துறோம். எஃப் 1 பந்தயத்தில் கூட நாய், முயல், மான் போன்ற விலங்குகள் சில நேரங்களில் உள்ளே வந்துவிடும். இது கூட தெரியாத அறிவாளிகள் தான் நம்மை விமர்சனம் செய்திருந்தார்கள். இந்த விமர்சனங்களை மீறி ஃபார்முலா 4 கார் பந்தயம் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது” என்று பேசினார். 

சார்ந்த செய்திகள்