இசையமைப்பாளர் இளையராஜாவின் மகள் பவதாரிணி (47) உடல்நலக்குறைவு காரணமாக இலங்கையில் காலமாகியுள்ளார். இவர், இளையராஜா இசையமைத்த ராசய்யா திரைப்படத்தில் இடம்பெற்ற 'மஸ்தானா மஸ்தானா' பாடல் மூலம் பாடகியாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து பாரதி படத்தில் இடம்பெற்ற 'மயில் போல பொண்ணு ஒன்னு' பாடல் மூலம் பிரபலமானவர். அந்தப் பாடலுக்காகத் தேசிய விருது பெற்றவர்.
மேலும் தனது சகோதரர்கள் கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா மற்றும் அப்பா இளையராஜா ஆகியோர் இசையில் பல்வேறு சூப்பர் ஹிட் பாடல்களைப் பாடியுள்ளார். விஜய் நடித்த காதலுக்கு மரியாதை, பிரண்ட்ஸ் படங்களில் பாடல்களைப் பாடியுள்ளார். தனித்துவமான குரலில் பாடி ரசிகர்களின் நல்ல வரவேற்பைப் பெற்றவர். இது சங்கீத திருநாளோ, காற்றில் வரும் கீதமே, ஒளியிலே தெரிவது தேவதையா உள்ளிட்ட பாடல்கள் இவரது குரலில் வந்த ஹிட் பாடல்களாகும். இந்த சூழலில் இலங்கை சென்றிருந்த பவதாரிணி அங்கு ஆயுர்வேத சிகிச்சை பெற்றுவந்த நிலையில், உடல் நலக்குறைவு காரணமாக இலங்கையில் காலமானார். இந்த துயர சம்பவம் தமிழ் திரையுலகத்தினர் மற்றும் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனையொட்டி திரைத்துறையினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் தங்களது இரங்கல்களைப் பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில் பாடகி பவதாரிணியின் மறைவுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக வலைத்தளப் பதிவில், “இசைஞானி இளையராஜாவின் அன்பு மகள் பின்னணி பாடகி சகோதரி பவதாரணி உடல் நலக்குறைவால் மரணமடைந்தார் என்ற செய்தியறிந்து மிகுந்த வருத்தமுற்றேன். தனித்தன்மையுடன் கூடிய குரலால் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தைக் கொண்டிருந்த அவரது மரணம், தமிழ் இசை உலகிற்கு பேரிழப்பாகும். அவருடைய மரணத்துக்கு என் ஆழ்ந்த இரங்கல். பவதாரணியை இழந்து வாடும் இசைஞானி இளையராஜா, சகோதரர்கள் கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா உள்ளிட்ட அவருடைய குடும்பத்தார், நண்பர்களுக்கு என்னுடைய ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.