நீட் தேர்வால் தமிழ்நாட்டில் இதுவரை பல மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர். மாணவர்களின் உயிரைப் பறிக்கும் இந்த நீட் தேர்வைத் தடுக்க தமிழ்நாடு அரசின் சார்பில் தற்போது பல முன்னெடுப்புகளைத் தொடர்ந்து செய்து வருகின்றனர். அந்த வகையில் நீட் தேர்விற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கடந்த ஆகஸ்ட் மாதம் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதியில் திமுக சார்பில் உண்ணாவிரதம் போராட்டம் நடத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து திமுக இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கடந்த அக்டோபர் 21ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் 'நீட் விலக்கு - நம் இலக்கு' என்ற தலைப்பில் 50 நாட்களில், 50 லட்சம் கையெழுத்திட்டு, குடியரசுத் தலைவரிடம் ஒப்படைக்கும் கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கி வைத்தார், அந்த நிகழ்வில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் மற்றும் பல திமுக நிர்வாகிகள் கையெழுத்திட்டனர்.
இந்த நிலையில் நீட் விலக்கை வலியுறுத்தி, தொடங்கப்பட்டுள்ள இந்த கையெழுத்து முன்னெடுப்பிற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று சென்னை அசோக் நகரில் உள்ள விசிக அலுவலகத்திற்கு நேரில் சென்று திருமாவளவனிடம் கையெழுத்து பெற்றார்.