Skip to main content

நள்ளிரவில் கைது; நெஞ்சுவலியால் துடிதுடித்த செந்தில் பாலாஜி

Published on 14/06/2023 | Edited on 14/06/2023

 

Minister Senthilbalaji arrested at midnight; Hospitalized for chest pain

 

கடந்த 8 நாட்களுக்கு மேலாக அமைச்சர் செந்தில் பாலாஜியின் நண்பர், உறவினர்கள் வீடு, அலுவலகங்களில் சோதனை நடைபெற்ற நிலையில் தற்பொழுது சென்னையிலும் கரூரிலும் அமலாக்கத்துறை சோதனையானது நடைபெற்றது. கரூரில் உள்ள அவரது பூர்வீக வீட்டிலும், சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அரசு இல்லத்தில் சோதனையானது நடைபெற்றது. அதேபோல் சென்னை ஆர்.ஏ. புரத்தில் உள்ள செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

 

தலைமைச் செயலகத்தில் உள்ள செந்தில் பாலாஜியின் அறையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். இந்தியன் வங்கி அதிகாரிகளும் அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு உதவியாக அவரது அறையில் சோதனையில் ஈடுபட்டனர். தொடர்ந்து நேற்று நள்ளிரவு அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். அதனையடுத்து நெஞ்சு வலிப்பதாகக் கூறிய அமைச்சர் செந்தில் பாலாஜி உடனடியாக ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நள்ளிரவில் ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அமைச்சர்கள் மற்றும் திமுகவின் முக்கிய பொறுப்பாளர்கள் மருத்துவமனையில் சூழ்ந்துள்ளனர்.

 

18 மணி நேரமாக நீடித்த சோதனைக்குப் பிறகு அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதுவும் அவர் நெஞ்சுவலியால் துடிக்கும் காட்சிகளும் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டது குறித்து சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி, வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ ஆகியோர் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்