கோடை காலம் தொடங்கி வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தல்கள் கொடுக்கப்பட்டு வருகிறது. நீர்ச்சத்து குறைபாட்டை தடுப்பதற்காக ஒவ்வொரு சுகாதார நிலையங்களிலும் ஓ.ஆர்.எஸ். கரைசல்களை ஆயத்தமாக வைத்திருக்கும்படி தமிழக அரசு அறிவித்திருந்தது. கோடை காலம் தொடங்கியுள்ளதால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் பலரும் சுற்றுலாத் தலங்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.
அதோடு இந்திய வானிலை ஆய்வு மையம் சார்பில் தமிழகத்திற்கு தொடர்ந்து வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கைகளும் விடுக்கப்பட்டு வருகின்றன. இத்தகைய சூழலில் தமிழகத்தில் இன்று (04.05.2024) முதல் கத்தரி வெயில் தொடங்குகிறது. வரும் 28 ஆம் தேதி வரை என 25 நாட்களுக்கு இந்த கத்தரி வெயில் நீடிக்க உள்ளது. அதே சமயம் கத்தரி வெயில் காலத்தின் முதல் 7 நாட்களுக்கு வெப்பம் அதிகளவில் இருக்க வாய்ப்புள்ளது என வானிலை மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கோடை விடுமுறையையொட்டி சென்னை விமான நிலையத்தில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு விமான சேவைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. அதன்படி சென்னையில் இருந்து தூத்துக்குடி, திருச்சி, மதுரை, கோவை, ஐதராபாத், டெல்லி, கொல்கத்தா, பெங்களூருக்கு கூடுதல் விமானங்கள் இயக்கப்படுகின்றன. சுமார் 40 க்கும் மேற்பட்ட விமானங்களின் சேவை அதிகரிப்பால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அதாவது சென்னை - தூத்துக்குடி இடையே தினசரி 6 விமானங்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 8 விமானங்கள் இயக்கப்படுகின்றன. அதே போன்று சென்னை - கோவை இடையே தினசரி 12 விமானங்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 16 விமானங்கள் இயக்கப்படுகின்றன. மேலும் சென்னை - மதுரை இடையே 10 விமானங்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 14 விமானங்கள் இயக்கப்படுகின்றன. அதோடு சென்னை - பெங்களூரு இடையே 16 விமானங்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 22 விமானங்கள் இயக்கப்படுகின்றன. சென்னை - ஐதராபாத் இடையே தினசரி 20 விமானங்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 28 விமானங்கள் இயக்கப்படுகின்றன. கோடை விடுமுறை காரணமாக சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் பயணிகளின் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
முன்னதாக லண்டனில் இருந்து தினமும் அதிகாலை 03.30 மணிக்கு சென்னைக்கு வரும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் இன்று (04.05.2024) 6 மணி நேரம் தாமதமாக வந்து கொண்டிருக்கிறது. இதனால் சென்னையில் இருந்து லண்டன் செல்லவுள்ள மற்றும் லண்டனில் இருந்து சென்னை வந்துகொண்டிருக்கிற பயணிகள் சுமார் 600க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.