விழுப்புரத்தில் நேற்று புலம் பெயர் தொழிலாளர் அணி மற்றும் தமிழ்நாடு வீட்டு வேலை தொழிலாளர் நல அறக்கட்டளை இணைந்து சர்வதேச புலம்பெயர்ந்தோர் தின விழா நடைபெற்றது. இவ்விழாவில், வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு பேசினார்.
அதில், “திராவிட மாடல் ஆட்சியில் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதுதான் லட்சிய கொள்கை. இரண்டு நாட்களுக்கு முன்பு நம் பள்ளி திட்டத்தை தொடங்கிய முதல்வர் அதற்கான பங்களிப்பாக 5 லட்ச ரூபாய் நிதி வழங்கினார். அந்த வகையில் நானும் எனது ஒரு மாத ஊதியத்தை நமது பள்ளி திட்டத்துக்காக வழங்க முடிவு செய்துள்ளேன். விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் சார்பில் இதுவரை 3467 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 36 லட்சம் பயனாளிகளுக்கு அரசு வழங்கியுள்ளது.
வெளிநாடு வாழ் தமிழர் நல வாரியம் அறிவிக்கப்பட்ட பிறகு அதில் உறுப்பினராகச் சேர்ந்து வருகிறார்கள். அப்படி சேரும் அனைவரும் போலி ஏஜெண்டுகளை நம்பி வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்லக்கூடாது. அப்பாவிகளை ஏமாற்றிய அப்படிப்பட்ட போலி ஏஜெண்டுகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இப்படி வெளிநாட்டு வேலைக்கு அழைத்துச் சென்று ஏமாற்றிய திருச்சியைச் சேர்ந்த இரண்டு போலி ஏஜெண்டுகள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் காவல்துறை மூலம் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்களின் சொத்துக்களையும் பறிமுதல் செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
வெளி நாடுகளுக்கு வேலைக்குச் சென்று அங்கு சரியான வேலை உணவு இல்லாமல் தவித்து வந்த 1700 பேர் மீட்கப்பட்டு பாதுகாப்புடன் தாயகம் அழைத்து வரப்பட்டுள்ளனர். தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் ஆட்சியில் கல்வி வேலை வாய்ப்பு பொருளாதாரம் என அனைத்துத் துறைகளிலும் முதன்மை மாநிலமாக தமிழகம் திகழ்ந்து வருகிறது” எனத் தெரிவித்தார். இவ்விழாவில் இயேசு சபையின் சென்னை மறை மாநில தலைவர் ஜெபமாலை ராஜா, வளர்ச்சி திட்ட இயக்குநர் வசந்த், தமிழ்நாடு வீட்டு வசதி தொழிலாளர் நல அறக்கட்டளை அமைப்பாளர் வளர்மதி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.