Skip to main content

தேர்வு எழுதாதவர்களுக்கு மறுதேர்வு உண்டு... -12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் குறித்து அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

Published on 16/07/2020 | Edited on 16/07/2020
செங்கோட்டையன்

 

மாணவர்கள், பெற்றோர்களின் நலனைக் கருத்தில் கொண்டே பனிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளதாக, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

 

தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 2 முதல் மார்ச் 24 வரை நடைபெற்றது. ஆனால் கரோனா தொற்று அச்சத்தால் இறுதியாக நடைபெற்ற தேர்வினை சுமார் 35 ஆயிரம் மாணவர்கள் எழுதவில்லை.

 

இந்நிலையில், தேர்வெழுதாதவர்களில் 718 பேர் மட்டுமே தேர்வு எழுத விருப்பம் தெரிவித்திருந்தாலும், அவர்களுக்கு தேர்வு வைத்த பின்னரே முடிவை அறிவிக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார். ஆனால் பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை எதிர்பாராத நிலையில் வெளியாகின. இதுகுறித்து ஈரோட்டில் இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது,

“பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் 8 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் எதிர்காலத்தை கருத்தில் கொண்டுதான் தேர்வு முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன என்றும், பெற்றோர், மாணவர்கள் எல்லோரின் வேண்டுகோளையும் ஏற்று, இன்று தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

 

தேர்வை எழுதாத மாணவர்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை. முதல்வரின் ஆணைப்படி, அவர்கள் பொதுத்தேர்வை எழுத அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இறுதி தேர்வு எழுதாதவர்களுக்கு 27-ம் தேதி மறுதேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்படும். அவர்களின் தேர்வு முடிவுகளும் விரைந்து வெளியிடப்படும்.” இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்