கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஆட்சிப் பொறுப்பேற்ற திமுக அரசு இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமான நிலங்களை மீட்டு வருகிறது. அதன்படி பாளேகுளி கிராமத்தில் உள்ள பெரிய மலை பெருமாள் சாமி கோவில், பட்டாளம்மன் கோவில் சொந்தமான நிலத்தில் கற்கள் வெட்டி எடுக்கும் எடுக்கப்பட்டிருப்பதும், அதேபோல் நாகமங்கலம் கிராமத்தில் அனுமந்த சாமி கோவிலுக்குச் சொந்தமான நிலத்தில் கிரானைட் கற்கள் வெட்டி எடுத்து இருப்பதும் கண்டறியப்பட்டது. இந்த முறைகேடு தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை 198 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
இது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற வரும் நிலையில் நாளை மறுதினம்(26-07-2024) வழக்குத் தொடர்பாக நேரில் ஆஜராகுமாறு கனிமவளத்துறை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் இன்று தமிழக இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு அபராதம் விதிக்கப்பட்டுள்ள முறையீடு செய்த கல்குவாரிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அமைச்சருடன் மாவட்ட ஆட்சியர் சரயு, காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை, கனிமவளத்துறை இணை இயக்குனர் ஜெயபால், இந்து சமய அறநிலை துறை உதவி ஆணையர் சுதர்சன், மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
ஆய்வுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, “கோவிலுக்குச் சொந்தமான 12.67 ஏக்கர் இடத்தில் முறைகேடுகளாகக் கல்குவாரிகள் நடத்தி கிரானைட் கற்கள் வெட்டி எடுக்கப்பட்டுள்ளது. மேலும் கிரானைட் கழிவுகள் அதே பகுதியில் கோவிலுக்குச் சொந்தமான நிலத்தில் கொட்டப்பட்டு 4.16 ஏக்கர் நிலம் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இது தொடர்பாகச் சென்னை உயர்நீதிமன்றத்தில் நாளை மறுதினம் வழக்கு விசாரணைக்கு வருகிறது.
இத்துறையின் அமைச்சர் என்பதால் நான் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தேன். கடந்த காலங்களில் முறைகேடாகக் கோவில் நிலங்களில் கற்கள் வெட்டி எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாகக் கூட்டுப் புலனாய்வுக் குழு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த முறைகேட்டில் ஈடுபட்ட நபர்கள் யாராக இருந்தாலும், எந்த பதவியில் இருந்தாலும், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகம் முழுவதும் கடந்த மூன்று ஆண்டுகளில் 6 ஆயிரத்து 75 கோடி ரூபாய் செலவில் ஒரு லட்சத்து 1 லட்சத்து 69 ஏக்கர் கோவில் நிலங்கள் அடையாளம் காணப்பட்டு அவற்றை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இதுவரையில் 16 ஆயிரம் ஏக்கர் நிலம் மீட்கப்பட்டுள்ளது. கோவில் நிலங்களை முறைகேடுகளாகப் பட்டா மாற்றப்பட்ட 18,000 பட்டாக்கள் மீண்டும் கோவில் பெயரில் பட்டா மாற்றப்பட்டுள்ளது. தொடர்ந்து தமிழக முதலமைச்சரின் உத்தரவின் பேரில் கோவில் நிலங்கள் மீட்கும் பணிகள் நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தார்.