திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே ரெங்கப்பநாயக்கன்பட்டியில் வைகை ஆற்று தண்ணீரில் அடித்து வரப்பட்டு உயிருக்கு போராடிக்கொண்டிருந்த பசுமாடு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமியின் மேற்பார்வையில் மீட்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டத்தில் தொடர்மழை பெய்து வருவதை முன்னிட்டு வைகை ஆறு நீர்வரத்து பாதை, குடகனாறு நீர்வரத்து பாதை பகுதிகளில் ஆய்வு செய்த ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கரைப்பகுதியில் வசிக்கும் மக்களைப் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ஊராட்சி நிர்வாகத்தினர் அவர்களுக்கு முறையான தங்குமிடம் வழங்கவேண்டுமென உத்தரவிட்டார்.
அதனைத் தொடர்ந்து நிலக்கோட்டை தாலுகாவிற்கு உட்பட்ட ரெங்கப்பநாயக்கன்பட்டிக்கு சென்று வைகை ஆற்றுப் பாலத்தில் நீர்வரத்து பாதைகளை ஆய்வு செய்தபோது வைகை ஆற்று வெள்ளத்தில் பசுமாடு ஒன்று உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதை பார்த்தவுடன் உடனடியாக கிராம மக்கள், கட்சி நிர்வாகிகளை அழைத்து உயிருக்கு போரடிக்கொண்டிருந்த பசு மாட்டை காப்பாற்ற நடவடிக்கை எடுத்தார்.