சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.எல்.ஏக்கள் தங்கும் விடுதியில் தேர்தல் பணப்பட்டுவாடாவுக்காக கோடிக்கணக்கில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் பறக்கும் படையினருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து பறக்கும்படை அதிகாரிகள் மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று இரவு எம்.எல்.ஏக்கள் விடுதியின் சி -பிரிவில் உள்ள வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அறை, ஆளுங்கட்சி எம்.எல்.ஏக்கள் அறையில் சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் கைப்பற்றப்பட்டவை குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள், சோதனையில் சில வெற்றுப்பைகளும், துண்டு சீட்டுகளும் மட்டுமே கைப்பற்றப்பட்டன. மேலும், சோதனையின் போது பாதுகாப்பு பணியில் இருந்த காவலரிடம் வாக்குமூலம் பெறப்பட்டது தகவல் தெரிவித்துள்ளனர். பணம் எதுவும் கைப்பற்றப்பட்டதாக தகவல் இல்லை.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற இந்த சோதனை தொடர்பாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு வருமான வரித்துறை இன்று சம்மன் அனுப்பியுள்ளது. சோதனையில் எதுவும் சிக்கவில்லை என்று கூறப்படும் நிலையில் சம்மன் எதற்கு? என்ற கேள்வி எழுந்து அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.