வேலூர் ஸ்ரீபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல் உறுப்பு தான விழா நடைபெற்றது. இதில் ஆந்திர மாநில சுற்றுலாத்துறை மற்றும் இளைஞர் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரோஜா, வேலூர் மாநகர மேயர் சுஜாதா உட்பட பலர் பங்கேற்றனர்.
விழாவில் பேசிய ரோஜா, “ரத்த தானம் அனைவருக்கும் தெரியும். உடல் உறுப்பு தானம் பொதுமக்களுக்கு அந்த அளவுக்கு விழிப்புணர்வு இல்லை. உயிரிழந்த பின்னரும் மற்றவர் ஒருவருக்கு வாழ்க்கை கொடுப்பது தான் உடல் உறுப்பு தானம். தற்போதுள்ள இளைஞர்களுக்கு இதற்கான விழிப்புணர்வு அதிகம் தேவை. எந்த ஒரு மதமும் எந்த ஒரு தெய்வமும் உடல் உறுப்பு தானம் செய்யக்கூடாது என்று கூறவில்லை. தானத்தில் சிறந்தது அன்னதானம் அதைவிட சிறந்தது உடல் உறுப்பு தானம்.
இன்றைக்கு ஆயிரம் மடங்கு சிறந்த தானம் உடல் உறுப்பு தானம். அன்னதானம் பசியைப் போக்கும். கல்வி தானம் அறியாமையைப் போக்கும், உடல் உறுப்பு தானம் ஒரு மனிதனுக்கு உயிரையே கொடுக்கும். உறுப்பு தானம் அளிக்கப்படுவதன் மூலம் இறந்த பிறகு நாம் உயிரோடு வாழ்வோம்.
இறந்த பிறகும் நாம் கடவுளாக இருப்பதற்கு நான்கு பேருக்கு உடல் உறுப்பு தானம் செய்தால் போதுமானது. இறந்த பிறகு உடல் உறுப்புகளை மண்ணில் புதைக்காதீங்க. மனுஷங்க மேல விதையுங்கள். அப்போது நாம் வாழ்வோம். இன்றைய இளைஞர்கள் உடல் உறுப்பு தானம் ஏற்படுத்த வேண்டும்” என்றார்.