புதுக்கோட்டையில் கரோனா தடுப்பு மற்றும் மாவட்ட வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து ஆய்வு செய்த பின் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, 'கரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டதும், தமிழக அரசின் செலவில் அனைவருக்கும் இலவசமாகத் தடுப்பூசி போடப்படும்' என அறிவித்தார்.
முதல்வரின் அறிவிப்பு தொடர்பாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், 'மருந்தை இலவசமாகக் கொடுக்க வேண்டியது மக்கள் நல அரசின் கடமை. இலவச கரோனா தடுப்பூசியை மக்களுக்குத் தான் காட்டும் சலுகை என நினைக்கிறாரா முதல்வர். நிற்கதியாய் நிற்கும் மக்களுக்கு 5 ஆயிரம் நிதி உதவி செய்ய மனமில்லாதவர், தன்னை தாராளப் பிரபுவாகக் காட்டிக் கொள்வதைக் காணச் சகிக்கவில்லை!' என விமர்சித்திருந்தார்.
இந்த நிலையில், மு.க.ஸ்டாலினுக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலடி கொடுத்த தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, "ஸ்டாலினின் நீலிக் கண்ணீரும், அரசியல் நடத்தையும் நகைப்பிற்குரியது. கரோனா தடுப்பூசி இலவசம் என்ற முதல்வரின் மக்கள் போற்றும் அறிவிப்பு கண்டு ஸ்டாலின் பதட்டப்பட வேண்டாம்; கொடுக்கின்ற குணம் வள்ளல் வாரிசுகளுக்கே வரும்; 2021-லும் அ.தி.மு.க ஆட்சியே மலரும்; இதுவே இனி சரித்திரம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.