வடகிழக்குப் பருவமழை காரணமாகத் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 21 ஆம் தேதி (21.10.2023) தொடங்கியதிலிருந்து தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கனமழைக்கும், மிக கனமழைக்கும் வாய்ப்பு இருக்கும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது.
அதன்படி தற்போது கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய தென் மாவட்டங்களின் பல இடங்களில் கனமழை பொழிந்து வருகிறது. நேற்று இரவு முதல் தொடர்ந்து மழை பெய்ததால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து மக்கள் தவித்து வருகின்றனர். பல்வேறு இடங்களில் போக்குவரத்து சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் இன்று இரவு 08.20 மணி வரை மிக மிக பலத்த மழை பெய்யக்கூடும் என்றும், எனவே இந்த 4 மாவட்டங்களுக்கு இன்று (17.12.2023) இரவு 08.20 மணி வரை ரெட் அலர்ட் விடுக்கப்படுகிறது எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் நாளை (18.12.2023) காலை 8.30 மணி வரை அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.