சென்னை நுங்கம்பாக்கம் டி.பி.ஐ. வளாகத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பகுதி நேர ஆசிரியர்கள் தொடர்ந்து ஐந்தாவது நாளாக இன்று போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் இன்று மாலை, உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த டெட் ஆசிரியர்களை நேரில் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், உங்களுடைய கோரிக்கைகளை முதல்வரின் கவனத்திற்கு எடுத்து சென்று நிச்சயம் நிறைவேற்றுவோம் என்று உறுதியளித்தார். மேலும், மீண்டும் போராடக்கூடிய சூழல் இருக்காது என நம்பி தற்காலிகமாக இந்தப் போராட்டத்தைக் கைவிடுங்கள் என்று தெரிவித்தார். இதனை ஏற்ற போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஆசிரியர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டனர். அதன் பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஆசிரியர்களுக்கு ஜுஸ் கொடுத்து உண்ணாவிரதப் போராட்டத்தை அமைச்சர் முடித்து வைத்தார்.