Skip to main content

எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் முத்துசாமி பதிலடி!

Published on 24/07/2024 | Edited on 24/07/2024
Minister Muthuswamy responds to Edappadi Palaniswami

அதிமுக பொதுச் செயலாளரும், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி, டாஸ்மாக் கடைகளில் காலி பாட்டில்களை திரும்ப பெறுவது சம்பந்தமாக நேற்று (23.07.2024) ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார். இந்நிலையில் இதற்கு பதிலளிக்கும் விதமாக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, மதுவிலக்குத்துறை அமைச்சர் சு. முத்துசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “சென்னை உயர்நீதிமன்ற ஆணைப்படி டாஸ்மாக் நிறுவனத்தால் காலி புட்டிகளை திரும்பப் பெறும் திட்டம் நீலகிரி மாவட்டத்தில் கடந்த 15.05.2022 முதல் அமல்படுத்தப்பட்டது. மற்ற மலை சார்ந்த பகுதிகளில் 15.06.2022 முதல் அமல்படுத்தப்பட்டது. தொடர்ந்து இதர மாவட்டங்களுக்கு விரிவாக்கம் செய்து இதுவரை மொத்தமாக 9 மாவட்டங்களில் முழுமையாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும் இத்திட்டத்தினை தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் விரிவுபடுத்தும் பொருட்டு மண்டலங்கள் வாரியாக ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டிருந்தது. இந்நிலையில் இது தொடர்பான வழக்கில் காலி புட்டிகள் மூன்றாம் நபரிடம் செல்லாமல் இருப்பதற்காகவும், காலி புட்டிகள் உடைக்கப்படாமல் மதுபான உற்பத்தி நிறுவனங்களுக்கே சென்றடைய வேண்டுமென்ற நோக்கத்துடனும் சென்னை உயர்நீதிமன்றம் காலி புட்டிகளை மதுபான உற்பத்தி நிறுவனங்களே திரும்பப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டி அறிவுறுத்தியது. அதனடிப்படையில் ஏற்கனவே கோரப்பட்டிருந்த ஒப்பந்தப்புள்ளிகள் ரத்து செய்யப்பட்டது. மேலும் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தும் நடவடிக்கையாக மதுபான உற்பத்தி நிறுவனங்களை அழைத்து காலி புட்டிகளை அவர்களே சேகரம் செய்ய வேண்டுமென்ற பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

Minister Muthuswamy responds to Edappadi Palaniswami

மதுபான உற்பத்தியாளர்களும் காலி புட்டிகளை திரும்ப பெறுவது குறித்து இசைவு தெரிவிக்க சிறிது கால அவகாசம் கேட்டுள்ளனர். சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாக்கும் பொருட்டு காலி புட்டிகளை திரும்பப் பெறும் திட்டம்  உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் திமுக ஆட்சியில் தான் அறிமுகப்படுத்தப்பட்டு வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தினை சென்னை உயர்நீதிமன்ற வழிகாட்டுதலுடன் வருகிற அக்டோபர் மாதத்திற்குள் அனைத்து மாவட்டங்களிலும் முழுமையாக செயல்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது. வயல்களிலும் சாலைகளிலும் பூங்காக்களிலும் காலி மதுபாட்டில்கள் வீசப்படுவதை தடுப்பதற்காகத்தான் திராவிட முன்னேற்றக் கழக அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. 10 ஆண்டுகால அவர்களின் ஆட்சியில் ஏன் பழனிச்சாமி இதை சிந்திக்கவில்லை. இப்பொழுது குற்றச்சாட்டுகள் சொல்லக்கூடியவர்கள் அந்த 10 ஆண்டு காலத்தில் இதை நடைமுறைபடுத்தியிருக்கலாமே.

காலி பாட்டில்கள் வயல்களிலும் பொது இடங்களிலும் வீசப்பட்டதால் அந்த நேரத்தில் விவசாயிகளும் பொதுமக்களும் எவ்வளவு கடுமையாக பாதிக்கப்பட்டார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. 10 ஆண்டு காலமாக அவர்களது ஆட்சிக் காலத்தில் அரசுக்கு வரவேண்டிய வருவாய் என்ன ஆனது என்று கேட்க வேண்டியுள்ளது. காலி பாட்டில்களை திரும்ப பெறுவதற்கான புதிய முயற்சிக்கான நடவடிக்கையை எடுக்கிறபொழுது உயர்நீதிமன்றம் சில நல்ல அறிவுறுத்தல்களை தெரிவித்ததன் அடிப்படையில் அதை அமலாக்கவே ஏற்கனவே விடப்பட்ட டெண்டரை டாஸ்மாக் நிர்வாகம் ரத்து செய்துள்ளது என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். 

சார்ந்த செய்திகள்