கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஈரோடு திண்டல் பகுதியில் மரம் நடும் விழாவை இன்று வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி துவக்கி வைத்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, "கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நெடுஞ்சாலைத்துறை சார்பாக 5 லட்சம் மரக்கன்றுகள் தமிழகத்தில் நடப்படுகின்றன. ஈரோட்டில் 12 ஆயிரம் மரங்கள் நடப்பட உள்ளன. நீதிமன்ற உத்தரவு மற்றும் அரசாணையின்படி கீழ்பவானி பிரதான கால்வாயில் பழுதடைந்த பகுதிகளை சீரமைக்கும் பணி துவங்கியுள்ளது. ஆனால், விவசாயிகள் இரு பிரிவாக பிரிந்து திட்டத்துக்கு ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்கள் என மாவட்டத்தில் உருவாகியுள்ளனர்.
எதிர்ப்பாளர்கள் கடந்த நான்கு நாட்களாக உண்ணாவிரதம் இருக்கின்றனர். பலமுறை இருதரப்பிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அவர்களிடம் பழைய கட்டுமான பகுதிகள் பலவீனம் அடைந்த பகுதிகள் மட்டுமே கால்வாயில் புதுப்பிக்கப்படும், தரைத்தளத்திலும் கரைகளிலும் சிமெண்ட் கான்கிரீட் அமைக்கப்படாது என வாக்குறுதி கொடுக்கப்பட்டது. நீர்வளத்துறை அமைச்சரும் இது குறித்து அறிக்கை தந்துள்ளார். இருந்தபோதிலும் ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களிடம் விளக்கமாக பலமுறை திட்டத்தை எடுத்துக் கூறியுள்ளோம். மீண்டும் ஒருமுறை நான் கையெழுத்திட்டு உறுதிமொழி தரத் தயாராக உள்ளேன்.
இதை ஏற்றுக்கொண்டு அவர்கள் உண்ணாவிரதத்தை கைவிட்டு என்னுடன் பேச்சுவார்த்தை நடத்த வருமாறு அழைக்கிறேன். இத்திட்டத்திற்கும் அத்திக்கடவு அவினாசி திட்டத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அத்திட்டத்தின் கீழ் பைப் லைன் போடப்பட்டது. 1450 குளங்களுக்கு நீரேற்றும் பணி நடைபெற்று வருகிறது. சில இடங்களில் பைப்கள் உடைந்து விடுகின்றன. இருந்தபோதிலும் பணிகள் முழுமையாக நிறைவு பெற்று எந்த பிரச்சனையும் இல்லாமல் திட்டத்தை நிறைவேற்ற முதலமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.
அதன்படி பணிகள் விரைவில் முடிந்து முதலமைச்சர் திட்டத்தை தொடங்கி வைப்பார். சோலாரில் தற்காலிக ஈரோடு மத்திய பேருந்து நிலையம் திறக்கப்பட உள்ளது. இதேபோன்று கனி ராவுத்தர் குளத்தில் மற்றொரு மத்திய பேருந்து நிலையம் கொண்டு வர நிலம் கையகப்படுத்த கலெக்டர் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்" எனக் கூறினார். நிகழ்ச்சியில் கலெக்டர் ராஜகோபால் சுங்காரா, மேயர் நாகரத்தினம் சுப்பிரமணியம் மற்றும் நெடுஞ்சாலைத் துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.