ஈரோட்டில் பள்ளி குழந்தைகளுக்கு இரண்டாம் கட்டமாக சிற்றண்டி வழங்கும் திட்டத்தை வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி ஈரோடு ஆசிரியர் காலனியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இன்று துவக்கி வைத்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, "ஏற்கனவே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காலை உணவு வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்தார். தற்போது இரண்டாம் கட்டமாக விடுபட்ட பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டம் துவக்கப்பட்டுள்ளது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் முதல் கட்டம் இரண்டாம் கட்டம் என சேர்த்து 96 பள்ளிகளை சேர்ந்த 9 ஆயிரத்து 180 குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கப்படுகிறது. இன்னும் மாவட்டத்தில் விடுபட்ட பள்ளிகள் மூன்றாவது கட்டத்தில் சேர்க்கப்படும் இந்த காலை சிற்றுண்டி வழங்குவதால் பள்ளிகளுக்கு வரும் மாணவர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. உடல் ஆரோக்கியம் பாதுகாக்கப்படுகிறது.
மேலும் கல்வி வளர்ச்சிக்காக அரசு பள்ளியில் படித்த மாணவிகள் கல்லூரியில் சேரும் போது மாதம் ரூபாய் 1000 வழங்கப்படுகிறது. செப்டம்பர் 15 முதல் ஒரு கோடி பெண்களுக்கு ஆயிரம் உரிமைத் தொகையாக வழங்கப்பட உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் சுமார் 15 அரசு பள்ளிகளை தனியார் தத்தெடுத்து மேம்படுத்த முன்வந்துள்ளன. மாற்றுத்திறனாளிகளுக்கு வடமுகம் வெள்ளோடு பகுதியில் நிலம் வழங்க இடம் பார்க்கப்பட்டுள்ளது. அந்த நிலத்தின் பிரிவை மாற்றம் செய்ய கலெக்டர் அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். அங்கிருந்து உத்தரவு வந்ததும் சுமார் 78 மாற்றுத்திறனாளிகளுக்கு அவ்விடத்தில் பட்டா வழங்கப்படும்" இவ்வாறு அவர் கூறினார். கலெக்டர் கிருஷ்ணன் உன்னி உட்பட பல உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.