Skip to main content

அத்திக்கடவு - அவிநாசி திட்டம் காலதாமதம் ஏன்? - அமைச்சர் முத்துசாமி விளக்கம் 

Published on 05/08/2024 | Edited on 05/08/2024
Minister Muthusamy explanation that Why the delay in Athikadavu-Avinashi project

ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் அத்திக்கடவு அவிநாசி திட்டம் குறித்து அதிகாரியுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு அமைச்சர் சு.முத்துசாமி தலைமை தாங்கினார். ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா, டி.ஆர்.ஓ சாந்தகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் முத்துசாமி, “அத்திக்கடவு - அவிநாசி திட்டம் மிகப்பெரிய திட்டம். இந்த  திட்டத்தை முடிக்க அதிகாரிகள் இரவு பகலாக வேலை செய்துள்ளனர். ஆட்சியர் வாரவாரம் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார். திமுக அரசு பொறுப்பேற்ற போது, இந்த திட்டத்தை வேகப்படுத்த வேண்டும் என  முதல்வர் அறிவுறுத்தினார். அதே நேரத்தில் 6 பம்பிங் நிலையங்களில் முதல் மூன்று நீரேற்று நிலையங்களுக்கு இடையே உள்ள நிலம் பயன்பாட்டிற்கு எடுப்பதில் தொய்வு ஏற்பட்டு பணிகள் நடைபெறவில்லை. இந்த பகுதிகளில் நிலம் கையகப்படுத்த மூன்று பம்பிங் நிலையங்களுக்கு இடையே உள்ள நிலங்களைக் கையகப்படுத்த அரசின் சார்பில் நேரடியாக விவசாயிகளின் வீடுகளுக்குச் சென்று பேசி நிலத்தைப் பயன்படுத்திக் கொள்ள அனுமதி பெற்றோம். 

இத்திட்டத்தைப் பயன்பாட்டிற்குக் கொண்டு வர திமுக அரசுதான் காரணம். விவசாயிகளிடம் நிலத்தைப் பெற்ற பிறகு தண்ணீர் பற்றாக்குறையால் திட்டத்தைச் செயல்படுத்துவதில் கால தாமதம் ஏற்பட்டது. பீடர் லைன் மூலம் 1,045 குளங்கள் நிரப்பப்பட வேண்டும். அதைப் பயன்படுத்தாமல் இருந்ததால் தயார்ப்படுத்தக் காலதாமதம் ஏற்பட்டது. கடந்த ஆட்சியில் முதலிலேயே நிலத்தை விவசாயிகளிடம் பெற்றிருந்தால் இத்தனை பிரச்சனை ஏற்பட்டு இருக்காது. இத்தனை காலதாமதமும் ஏற்பட்டிருக்காது. பவானி ஆற்றில் கூடுதலாக வரக்கூடிய ஒன்றரை டி.எம்.சி தண்ணீரை இந்த திட்டத்திற்குப் பயன்படுத்த வேண்டும். கூடுதலாகத் தண்ணீர் வரும் போது திட்டம் முழுமையாகச் செயல்பாட்டிற்கு வரும். அப்போது திட்டம் தொடங்கி வைக்கப்படும்.

முதல் கட்டத்திலேயே விவசாயிகளிடம் பேசி நிலம் எடுத்திருந்தால் இத்தனை பிரச்சனை வந்திருக்காது. 1,416 விவசாயிகளின் நிலத்தை இந்தத் திட்டத்திற்குப் பயன்படுத்தி உள்ளோம். அவர்களுக்கு வழங்க வேண்டிய நிதியை வழங்குவதற்கான நடவடிக்கைகளும் செய்யப்பட்டு வருகிறது. இதில் தற்போது 100 விவசாயிகளுக்கு மட்டுமே நிலத்திற்கான தொகை வழங்க வேண்டியுள்ளது. அவர்களிடமும் பேசிவிட்டோம். அந்தப் பணியும் விரைவில் முடிந்துவிடும். தண்ணீர் திறப்பதற்கு முன்பாக இவர்களுக்கு வழங்க வேண்டிய நிதி வழங்கப்படும். தற்பொழுது போதுமான அளவு தண்ணீர் இல்லை. இருப்பு உள்ள தண்ணீரை வைத்து இந்த திட்டத்தைச் செயல்பாட்டிற்குக் கொண்டு வர முடியாது. கீழ்பவானி கால்வாயில் ஆகஸ்ட் 15ஆம் தேதி தண்ணீர் பாசனத்திற்குத் திறக்கப்பட்ட பிறகு உபரி நீரைக் கொண்டு அத்திக்கடவு திட்டத்தைச் செயல்படுத்துவதற்காகத் தேதி நிர்ணயம் செய்யப்படும்” என்றார். 

தமிழக பாஜக தலைவர் அத்திக்கடவு அவிநாசி திட்ட விவகாரத்தில் அரசியல் செய்கிறாரா என்ற கேள்விக்கு, பதில் அளித்து அமைச்சர் முத்துசாமி, “இந்த விவாகரத்தில் அவர் அரசியல் செய்கிறார் என்று நான் பார்க்கவில்லை. அவர் கூறிய கருத்துக்கள் நியாயமானது தான். அவர் விவரம் தெரியாமல் கூட பேசி இருக்கலாம். திட்டம் தாமதத்திற்கான காரணத்தைக் கூறிவிட்டோம். இதை அவர்கள் புரிந்து கொள்வார்கள் என்று நினைக்கிறேன்" என்றார்.

சார்ந்த செய்திகள்