கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை நகர் சிறப்பு நிலை பேரூராட்சியில் ரூ. 1 கோடியே 10 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய அலுவலக கட்டட திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இவ்விழாவில் பேரூராட்சிகள் உதவி இயக்குநர் கு. வெங்கடேசன் வரவேற்றார். கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமை வகித்துப் பேசினார். பேரூராட்சி மன்ற தலைவர் க. பழனி வாழ்த்துரையாற்றினார்.
இந்த விழாவில் தமிழ்நாடு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் புதிய அலுவலக கட்டடத்தைத் திறந்து வைத்துச் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், “அண்ணாமலை நகரில் உள்ள பிரசித்தி பெற்ற பாசுபதேஸ்வரர் கோயில் குளத்தைத் தூர்வாரி சுற்றி நடைபாதை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கொண்டு வந்த மக்கள் திட்டங்களை, மக்களிடையே கொண்டு செல்ல வேண்டும். அதிமுக பல்வேறு முறை ஆட்சி பொறுப்பேற்றாலும், திமுக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆட்சியில் தான் தனிநபர் பலன் பெறுகின்ற திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
தாயிக்கும், சேய்க்கும் உதவித் தொகை வழங்கும் திட்டத்தைக் கொண்டு வந்து சாதனை படைத்தவர் முதல்வர் மு.க. ஸ்டாலின். தவப்புதல்வன் திட்டத்தில் மாணவர்களுக்கும், புதுமைப்பெண் திட்டத்தில் மாணவியர்களுக்கும் ரூ.1000 வழங்கப்படுகிறது. ஓரே குடும்பத்தில் தாய், மகன், மகள் ஆகிய மூவருக்கும் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத திட்டம் இந்த திட்டம் தமிழகத்தில்தான் செயல்படுத்தப்பட்டுள்ளது” எனப்பேசினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராகப்பொறுப்பேற்றதைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்து வருகிறார். முதலில் அவர் எப்படி முதலமைச்சராக வந்தார். அதே போல் முதல்வராக இருந்த ஓ.பி.எஸ். எப்படி துணை முதல்வராக ஆக்கப்பட்டார் என்பதற்குப் பதில் கூறட்டும். சிண்டு முடிக்கிற வேலையைச் செய்யவேண்டாம். திமுகவில் சுயம்பாக வளர்ந்து திறம்படச் செயல்பட்டு 40க்கு 40 வெற்றிக்கு ஒரு தூணாகச் செயல்பட்டவர் உதயநிதி ஸ்டாலின். இவரை எடப்பாடி ஏற்றுக்கொள்ளத் தேவையில்லை. நாங்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டுவிட்டோம்” எனக்கூறினார்.
அண்ணாமலை நகர் சிறப்பு நிலை பேரூராட்சியின் செயல் அலுவலர் கோ.பாலமுருகன் நன்றி கூறினார். விழாவில், சரண்யா ஐ.ஏ.எஸ்., வட்டாட்சியர் ஹேமா ஆனந்தி, பேரூராட்சி துணைத் தலைவர் வி. தமிழ்ச்செல்வி, திமுக ஒன்றிய செயலாளர்கள் ராஜேந்திரன், சங்கர், சோழன், முத்து பெருமாள், சிதம்பரம் நகர்மன்ற உறுப்பினர்கள் அப்பு சந்திரசேகரன், ஏ.ஆர்.சி. மணிகண்டன், நகரத் துணை செயலாளர் பா.பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக சிதம்பரம் அருகே வல்லம்படுகையில் சமுதாய நலக்கூட்டத்தையும், சி. தண்டேஸ்வரநல்லூர் ஊராட்சியில் சுகாதார துணை மையத்தையும் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்.