புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் அரசு மேல்நிலைப் பள்ளியில் தொடர்ந்து பல ஆண்டுகளாக மாணவர்களின் தேர்ச்சி மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்று வருவதையடுத்து ஆசிரியர்கள் மற்றும் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளைப் பாராட்டி பரிசு வழங்கும் நிகழ்ச்சி அறந்தாங்கி மாவட்டக் கல்வி அலுவலர் முருகேசன் தலைமையில் நடந்தது. உள்ளாட்சி பிரதிநிதிகள், பெற்றோர் ஆசிரியர் கழகம், எஸ்எம்சி, கிராமத்தினர் கலந்து கொண்ட விழாவில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டு ஆசிரியர்கள், மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து பேசிய அவர், “கல்வியால் மட்டுமே நம்மால் உயர முடியும் என்று பல்வேறு தடைகளைக் கடந்து தொடர்ந்து சாதித்து வரும் மாணவ, மாணவிகளைப் பாராட்டுகிறேன். இப்போது ஒரு மாணவியிடம் என்ன படிக்கப் போறிங்க என்று கேட்டேன். செவிலியருக்கு படிக்கணும் என்றார். மதிப்பெண் போதுமா? கல்லூரியில் இடம் கிடைக்குமா என்று கேட்டேன். அதற்கு அந்த மாணவி சொன்ன பதில்... நான் தொடர்ந்து அரசுப் பள்ளியில் படித்ததால் 7.5% இட ஒதுக்கீட்டில் எனக்கு இடம் கிடைக்கும் என்று சொன்னார்.
இந்த 7.5% இட ஒதுக்கீடு எப்படி வந்தது? கடந்த அ.தி.மு.க ஆட்சியில் மருத்துவம் படிக்க மட்டும் ஒரு குழு அமைத்து இட ஒதுக்கீட்டு மசோதா கொண்டு வந்தபோது அன்றைய எதிர்க்கட்சித் தலைவரும் இன்றைய முதல்வருமான மு.க. ஸ்டாலின் அந்த தீர்மானத்தை வரவேற்று ஆதரித்தார்கள். ஆனால் ஆளுநர் கையெழுத்து போடவில்லை. அப்போதைய ஆட்சியாளர்கள் அமைதியாக இருந்தபோது அன்றைய எதிர்க்கட்சித் தலைவராக இருந்த இன்றைய முதல்வர், இந்த தீர்மானத்திற்கு ஒப்புதல் அளிக்கவில்லை என்றால் ஆளுநர் மாளிகையை முற்றுகையிடுவோம் என்று போராட்டம் அறிவித்ததால் தான் இந்த 7.5% இட ஒதுக்கீட்டுக்கு ஒப்புதல் கிடைத்தது.
அதே நேரத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் சீட் கிடைத்த மாணவர்களுக்கு அரசு கல்விக் கட்டணம் செலுத்துவதாக சொன்னது ஆனால் தனியார் கல்லூரியில் இடம் கிடைத்த மாணவர்களால் ரூ.8, 10, 15 லட்சம் வரை கட்ட முடியாமல் தவித்தபோது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த இன்றைய முதல்வர் தனியார் கல்லூரி மாணவர்களுக்கான கட்டணங்களை திமுக கட்டுவதாக அறிவித்த பிறகு அன்றைய அரசு ஏற்றது.
கடந்த ஆட்சியில் 7.5% இட ஒதுக்கீடு மருத்துவம் மட்டும் கொடுத்தார்கள் ஆனால் அனைத்து கல்விக்கும் இட ஒதுக்கீடு தந்தவர் முதல்வர் ஸ்டாலின். ஏழை மாணவனுக்கும் உயர்கல்வி கிடைக்கச் செய்தது தான் சமூகநீதி. கர்மவீரர் காமராஜர், தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர் வழியில் தற்போது மு.க. ஸ்டாலின் ஏழைகளின் கல்விக்காக உழைத்தவர்கள். அதனால் தான் தமிழ்நாடு 89% கல்வியிலும் 52% உயர்கல்வியிலும் உயர்ந்து நிற்கிறது” என்றார்.