புதுக்கோட்டை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்று கீரமங்கலம் அருகில் உள்ள குளமங்கலம் வில்லுனி ஆற்றங்கரையில் எழுந்தருளியுள்ள பெருங்காரையடி மிண்ட அய்யனார் கோயில் 33 அடி உயரத்தில் வானில் தாவிச்செல்லும் வடிவில் அமைக்கப்பட்டுள்ள குதிரை சிலை ஆசியாவில் உயரமான சிலை என்ற பெயர் பெற்றதால் இதனை பெரிய கோயில் என்றே பக்தர்கள் அழைக்கின்றனர்.
இந்த கோயிலில் மாசிமகத் திருவிழா 2 நாட்கள் பிரமாண்டமாய் நடக்கும். இந்த நாட்களில் பிரமாண்ட குதிரை சிலைக்கு அதே உயரத்தில் காகிதப்பூ மாலைகளை பக்தர்கள் காணிக்கையாக செலுத்துவார்கள். சுமார் 3 ஆயிரம் மாலைகள் வரை குதிரை சிலைக்கு அணிவிக்கப்படும் அழகே தனி. இந்த நிலையில் கோயில் திருப்பணிகள் நடந்து வரும் நிலையில் எதிர் வரும் 16 ந் தேதி குடமுழுக்கு செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. அதற்கான பணிகளை திருப்பணிக் குழுவினர் செய்து வருகின்றனர். அமைச்சர்கள் சேகர்பாபு, ரகுபதி, மெய்யநாதன் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்.
இந்த நிலையில் பெருங்காரையடி மிண்ட அய்யனாரின் சிறப்புகளை சொல்லும் வகையில் பனங்குளம் இசை ஆசிரியை விஜயா அன்பரசன் ஆக்கத்தில் கீரமங்கலம் பகுதியை சேர்ந்த கவிஞர்கள் அன்பரசன் ஆசிரியர், விஜயா அன்பரசன், செரியலூர் எஸ்.பி.செல்வம், கீலமங்கலம் (சென்னை) எஸ்.சண்முகசுந்தரம், சேந்தன்குடி சி.புத்திரசிகாமணி ஆகியோர் எழுதிய பாடல்களுக்கு திரை இசை அமைப்பாளர் சமந்த் இசையில் உருவாக்கப்பட்டுள்ள இசைத்தட்டு வெளியீட்டு விழா கோயில் வளாகத்தில் ஊராட்சி மன்றத் தலைவர்கள் குளமங்கலம் வடக்கு பாஞ்சாலி செல்வகுமார், குளமங்கலம் தெற்கு சரண்யா ரஞ்சித்குமார் ஆகியோர் தலைமையில் விழாக்குழுவினர், கிராம பொதுமக்கள் முனனிலையில் அமைச்சர் மெய்யநாதன் வெளியிட்டார். இந்த பாட்கள் பெருங்காரையடி மிண்ட அய்யனாரின் பெருமைகளை வெளி உலகிற்கு கொண்டு செல்லும் என்றனர்.