புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ளது வடவாளம் ஊராட்சி கிழக்கு செட்டியாப்பட்டி கிராமம். பேருந்து பயணம் செய்ய 5 கி.மீ தூரம் செல்ல வேண்டும். பல வருடங்களுக்கு முன்பு போடப்பட்ட கிராமத்து ரோடு ஜல்லி கற்கள் உடைந்து நடக்க கூட முடியாத நிலை. அந்த கிராமத்தை சேர்ந்த டீ கடை நடத்தும் வீரமுத்து - வீரம்மாளின் 3 வது மகள் பவனியா தான் தற்போது குரூப் 1 தேர்வில் தேர்ச்சிபெற்று டிஎஸ்பியாக பொறுப்பேற்க உள்ளார்.
அரசு பள்ளி, கல்லூரியில் படித்து முதல் முயற்சியிலேயே குரூப் 1 தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள கிராமப்புற சாதனை பெண் பவானியாவை பலரும் பாராட்டி வரும் நிலையில், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் பாராட்டி பொன்னாடையும் நினைவுப் பரிசும் வழங்கியதோடு உங்கள் இலக்கான ஐஏஎஸ் ஆக வாழ்த்துகளையும் சொல்லியுள்ளார். மேலும் அதற்கான உதவிகளையும் செய்வதாகவும் கூறியுள்ளார். அதேபோல் கந்தர்வகோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சின்னத்துரை உள்பட பலரும் பாராட்டினர்.
'என் சின்ன வயது கனவு ஐஏஎஸ். அந்த இலக்கை அடைய வேண்டும். இதற்கு கிராமம், நகரம், தமிழ் வழி, ஆங்கில வழி என்ற எதுவும் தடையில்லை.தன்னம்பிக்கையும் முயற்சியும் இருந்தால் சாதிக்கலாம். எனக்கு நம்பிக்கை உள்ளது. அதனால் என் இலக்கை நோக்கி பயணிக்கிறேன்' என்கிறார் பவானியா.