பாலியல் குற்றச்சாட்டுகளில் யார் ஈடுபட்டாலும் தமிழ்நாடு அரசு கடும் நடவடிக்கை எடுக்கும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி தெரிவித்தார்.
திண்டுக்கல் வனத்துறை அலுவலகத்தில் நேற்று (22.11.2021) விவசாயிகளுக்கு இலவச மரக்கன்றுகள் வழங்கும் விழா நடந்தது. இதில் கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி, உணவு, வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி. செந்தில்குமார், காந்திராஜன் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர் பெரியசாமியிடம், “முத்தனம்பட்டி தனியார் கல்லூரி தாளாளர் ஜோதிமுருகன், பாலியல் வழக்கில் தற்போதுவரை தலைமறைவாக உள்ளாரே?” என கேள்வி எழுப்பினர். அதற்குப் பதில் அளித்த அவர், “தமிழகத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரியில் படிக்கும் மாணவிகள் மீது யார் பாலியல் தொல்லை கொடுத்தாலும் அவர்கள் மீது தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும். முத்தனம்பட்டி கல்லூரி சம்பவம் குறித்து விசாரிக்க கலெக்டர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.
மேலும் அவர், “மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் காட்டு யானைகளால் விளைநிலங்களும், விவசாயிகளும் தொடர்ந்து பாதிக்கப்பட்டுவருகின்றனர். கடந்த 2006ஆம் ஆண்டு, விளை நிலங்களுக்குள் புகுந்த யானைகள் கும்கி உதவியுடன் அடர்ந்த காட்டுப் பகுதிகளிலும், முதுமலை சரணாலயத்திலும் விடப்பட்டன. இது தொடர்பாக வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரனிடம் நாங்கள் பேசியுள்ளோம். மேலும், கொடைக்கானல் மற்றும் கீழ் மலைப் பகுதிகளில் ஆய்வு செய்து யானைகளை வேறு பகுதிகளுக்குக் கொண்டு சென்று விடுவதா அல்லது மாற்று வழி செய்வதா என்பது குறித்து தற்போது ஆய்வுசெய்துவருகிறோம். விவசாயிகளுக்கும் பயிர்களுக்கும் நிரந்தர தீர்வு காண்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார்.