மேட்டூர் அணையில் இருந்து இரண்டு லட்சம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுவதால், காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், 14 மாவட்ட ஆட்சியர்களுடன் தற்பொழுது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (04/08/2022) பிற்பகல் 12.00 மணிக்கு தருமபுரி, கிருஷ்ணகிரி, கோவை, கன்னியாகுமரி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர், தேனி, சேலம், ஈரோடு உள்ளிட்ட 14 மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார்.
காவிரி கரையோரப் பகுதிகளில் எடுக்கப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்த ஆலோசனையில், தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப., பல்வேறு துறையைச் சேர்ந்த உயரதிகாரிகளும் கலந்து கொண்டுள்ளனர்.