உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் கொரோனா இந்தியாவிலும் 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் பாதிப்புகளை ஏற்படுத்தியது. குறிப்பாக, கொரோனாவின் இரண்டாம் அலையின் போது மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தியது. மருத்துவத் துறையில் அதிகப்படியான செவிலியர்கள் தேவைப்பட்டதால் தற்காலிக செவிலியர்கள் அரசு மருத்துவமனைகளில் பணியமர்த்தப்பட்டனர். இந்த ஒப்பந்த செவிலியர்களின் பணிக்காலம் கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதியுடன் நிறைவடைந்ததாகத் தமிழக அரசு தெரிவித்தது. இதைக் கண்டித்து பாமக, அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கொரோனா காலத்தில் பணியாற்றிய ஒப்பந்த செவிலியர்களுக்கு நிரந்தரப் பணி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தின.
இதனைத் தொடர்ந்து, பணி நீட்டிப்பு பெறாத ஒப்பந்த செவிலியர்களுக்கு மாற்றுப்பணி வழங்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார். ஆனால், தங்களுக்கு மாற்றுப்பணி வழங்கப்பட்டால், அது நிரந்தரப் பணியாக இருக்காது என்றும், அதனால் தங்களை பணிநிரந்தரம் செய்யக் கோரியும் ஒப்பந்த செவிலியர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஒப்பந்த செவிலியர்களிடம் இன்று மாலை சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன், "சிலர் தூண்டுதலால் செவிலியர்கள் போராட்டம் நடைபெற்று வருகிறது. பெரு நகரங்களில் மட்டுமே பணியாற்றிய செவிலியர்களுக்குச் சொந்த ஊர்களில் பணியாற்ற வாய்ப்புள்ளது. ரூ. 14 ஆயிரம் மட்டுமே ஊதியம் பெற்ற நிலையில் தற்போது ரூ. 18 ஆயிரம் வழங்கப்படவுள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.