கடலூர் மாவட்டத்தில் பொதுமக்கள் காய்ச்சல் மற்றும் டெங்குகாய்ச்சல் காரணமாக அரசு மருத்துவமனையில் அதிக அளவில் கூட்டம் காணப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடலூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில் குமார் தலைமையில் தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வே. கணேசன், கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே விஷ்ணு பிரசாத், கடலூர் சட்டமன்ற உறுப்பினர் கோ.ஐயப்பன், நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சப. ராஜேந்திரன், காட்டுமன்னார்கோவில் சிந்தனைச் செல்வன், மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா ஆகியோர் கொண்ட குழுவினர் கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள காய்ச்சல் பிரிவு, டெங்கு பிரிவு மற்றும் அதிதீவிர சிகிச்சைப் பிரிவு உள்ளிட்ட பிரிவுகளில் காய்ச்சல் பாதிப்புகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளிடம் சிகிச்சை முறைகள். மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் எவ்வாறு கவனித்துக் கொள்கிறார்கள் என்பது குறித்துக் கேட்டறிந்தனர். முன்னதாக கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மழைக்கால தொற்று நோய்கள் தடுப்பு மற்றும் சுகாதார பணிகள் குறித்த மருத்துவத் துறை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டனர். இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “கடலூர் மாவட்டத்தில் தமிழக முதலமைச்சரின் நடவடிக்கையால் ரூ 8.60 கோடி மதிப்பீட்டில் 38 புதிய துணை சுகாதார நிலையங்கள் ரூ 4.81 கோடி மதிப்பீட்டில் 9 ஆரம்ப சுகாதார நிலையம் புற நோயாளிகள் பிரிவு கட்டடங்கள், வட்டார பொது சுகாதார அலகு கட்டிடங்கள் என பல்வேறு புதிய கட்டடங்கள் கட்டப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்குத் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
காய்ச்சல் பாதிப்புகளின் எண்ணிக்கையைப் பொறுத்துக் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்படும். மற்ற மாவட்டங்களை விட கடலூர் மாவட்டத்தில் மருத்துவ கட்டமைப்பு கூடுதலாக உள்ளது. கடலூர், சிதம்பரம், புவனகிரி, விருத்தாசலம், பண்ருட்டி மற்றும் திட்டக்குடி ஆகிய பகுதிகளில் ரூ 73.39 கோடி மதிப்பீட்டில் பல்வேறு புதிய கட்டிடங்கள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. கடலூர் மாவட்டத்தில் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவதாகச் செய்தி வந்ததன் அடிப்படையில் இன்று கடலூர் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கடந்த ஆண்டில் ஏற்பட்ட காய்ச்சல் பாதிப்புகளைக் காட்டிலும் இந்த ஆண்டு குறைந்த அளவு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை மற்றும் தென்மேற்கு பருவ மழைக் காலங்களின் போது காய்ச்சல், இருமல், சளி, வயிற்றுப்போக்கு பாதிப்புகள் என்பது இயல்பு. அந்த வகையில் தான் தற்போது காய்ச்சல் வந்திருக்கிறது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களைப் பார்வையிட்ட போது அனைவரும் நன்றாக உள்ளனர். அனைவரும் 2 அல்லது 3 நாட்களில் சிகிச்சை பெற்று வீடு திரும்புவார்கள். தமிழகத்தில் அதிக அளவிலான மருத்துவ கட்டமைப்புகள் உள்ளதால் காய்ச்சல் போன்ற பாதிப்பிற்கு உடனடியாக மருத்துவமனையை அணுகி சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும். இந்த துறைக்குப் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்கும் பட்சத்தில் உயிரிழப்புகள் இல்லாத பூஜ்ஜிய நிலையை எட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
2026ஆம் ஆண்டு வரை நிரப்பப்பட வேண்டிய பணியிடங்களைக் கணக்கிட்டு மருத்துவ பணியாளர்கள் தேர்வு வாரியம் வாயிலாக 2553 நபர்கள் தேர்வு செய்யப்பட்டு அனைத்து காலிப் பணியிடங்களும் நிரப்பப்படும்” எனக் கூறினார். இந்த ஆய்வில் மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன், பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருத்துவத் துறை இயக்குநர் செல்வ விநாயகம், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் சரண்யா, மாநகராட்சி ஆணையர் அனு, மருத்துவ நலப் பணிகள் இணை இயக்குநர் மருத்துவர் ஹீரியன் ரவிக்குமார், அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் அசோக் பாஸ்கர் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.