இந்தியா முழுவதும் கரோனாவின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்துவரும் சூழலில், பல மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் இல்லாமல் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். அதே போல், மேலும் பல மருத்துவமனைகளில் அக்சிஜன் மற்றும் மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் நோயாளிகளின் உயிரைக் காப்பதில் அதிகமாகப் போராட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், பல இடங்களில் ஆக்சிஜன் படுக்கை பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், பலருக்கு ஆம்புலன்ஸிலேயே வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனால், நோயாளிகளை மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் பற்றாக்குறை ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு எம்.யூ .வி கார்களை மாற்றியமைத்து, கோவிட் மருத்துவ சிறப்பு அவசர ஊர்தியைத் தற்காலிகமாக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தை நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என் நேரு கொடி அசைத்துத் துவங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் சென்னை ஆணையர் ககந்தீப் சிங் பேடி உடன் இருந்தார்.