Skip to main content

முருக பக்தர்களுக்காக 200 கிராம் அளவில் பஞ்சாமிர்தம் விற்பனை; துவக்கி வைத்த அமைச்சர்

Published on 04/02/2024 | Edited on 04/02/2024
Minister launched sale of 200 grams of Panchamirtha for  devotees of Murugan

தமிழகத்தில் அரசு சார்பில் மக்களுக்கு விலையில்லா அரிசி வழங்கப்பட்டு வருகிறது. வெளிச்சந்தையில் அரிசி விலை உயர்ந்தால் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் உணவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பழனி முருகன் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். பழனி கோயிலில் வழங்கப்படும் பஞ்சாமிர்த பிரசாதத்தை பக்தர்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர். கோயில் நிர்வாகம் சார்பில் பஞ்சாமிர்த விற்பனை நிலையங்கள் அமைக்கப்பட்டு பஞ்சாமிர்தம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அரை கிலோ எடை கொண்ட பஞ்சாமிர்தம் 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தற்போது பக்தர்கள் வசதிக்காக புதிதாக 200 கிராம் அளவில் 20 ரூபாய்க்கு பஞ்சாமிர்தம் விற்பனையை துவங்கியுள்ளது. உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கலந்து கொண்டு பஞ்சாமிர்த விற்பனையை துவக்கி வைத்தார். மேலும் பக்தர்கள் வசதிக்காக படிப்பாதையில் 25 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள முதல் உதவி மைய கட்டிடத்தையும் திறந்து வைத்தார். 

இதனைத் தொடர்ந்து பழனி கோயில் சார்பில் துவங்கப்பட உள்ள மனநல காப்பகத்தையும் உணவுத்துறை அமைச்சர் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில்  அறங்காவலர் குழு உறுப்பினர்கள், கோயில் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர். அதன் பின் செய்தியாளரிடம் பஅமைச்சர் சக்கரபாணி பேசும் போது, “பழனி முருகன் கோவிலை அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டு திருப்பதி போல் மாற்றுவதற்கு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 60 ஏக்கர் நிலம் கையகப்படுத்தும் பணியானது நடைபெற்று வருகிறது. மேலும் தைப்பூசம், பங்குனி உத்திர நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் பழனிக்கு வருகின்றனர். பக்தர்கள் பழனிக்கு வரக்கூடிய வழியிலான திண்டுக்கல் சாலை, பொள்ளாச்சி சாலை மற்றும் தாராபுரம் சாலையில் பக்தர்களுக்கு தேவையான கழிவறைகள் குளிக்கும் இடம் மற்றும் தங்கும் இடம் போன்ற அடிப்படை வசதிகளை மேம்படுத்தி கொடுக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது” என தெரிவித்தார். 

ஒன்றிய அரசு மலிவு விலையில் அரிசி விநியோகத் திட்டத்தை செயல்படுத்தியுள்ளது பற்றி கேட்டதற்கு பதில் அளித்த உணவுத்துறை அமைச்சர் சக்கர பாணி, தமிழகத்தில் முதலமைச்சர் கலைஞர் ரேஷன் கடைகள் மூலம் ஒரு ரூபாய்க்கு அரிசி விநியோகம் செய்யும் திட்டத்தை கொண்டு வந்தார். தற்போது விலை இல்லாமல் ரேஷன் கடைகளில் அரிசி விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் கடந்த காலத்தில் தமிழகத்தில் 370 அரிசி ஆலைகள் இயங்கி வந்தது, தற்போது 700 அரிசி ஆலைகள் உருவாக்கப்பட்டுள்ளது. முன்பு மாதத்திற்கு 6 லட்சம் மெட்ரிக்டன் அரிசி அரைக்கக் கூடிய வகையில் இருந்தது. தற்போது மாதத்திற்கு 12 லட்சம் மெட்ரிக்டன் அளவுக்கு அரிசி அரைக்கக்கூடிய வகையில் கட்ட மைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. 

மேலும் அனைத்து அரிசி அரைக்கக் கூடிய ஆலைகளிலும் கருப்பு பழுப்பு நீக்கக்கூடிய வகையில் நவீன இயந்திரம் 50 லட்சம் ரூபாய் செலவில் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலமாக தரமான அரிசி உற்பத்தி செய்யப்பட்டு பொதுமக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், தேனி உள்ளிட்ட இடங்களில் அரசு தனியாருடன் இணைந்து  அரிசி அரைக்க கூடிய ஆலைகள் துவங்கப்பட உள்ளது. இந்தப் பணிகள் முடிவடைந்த உடன் அரசு சார்பில் பேக்கிங் செய்யப்பட்ட அரிசி பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்படும் எனவும் தெரிவித்தார். அரிசி பற்றாக்குறையை தவிர்க்க 10 லட்சம் மெட்ரிக் டன் அளவிற்கு நெல் முப்பத்து ஐந்து ரூபாய் நாற்பது பைசாவிற்கு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. ஆட்சி பொறுப்பேற்று 32 மாதங்க ளாக தரமான அரிசி ரேஷன் கடைகள் மூலம் வலியோகம் செய்யப்பட்டு வருகிறது. 

ஒரு நெல்மணி கூட வீணடிக்கப்படாத சூழல் உருவாக்க வேண்டும் என முதலமைச்சர் உத்தரவிட்டத்தின் பேரில் 4 லட்சம் மெட்ரிக்டன் அளவுக்கு இருப்பு வைக்கக்கூடிய வகையில் 400 கோடி ரூபாய் செலவில் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் மழைக்காலத்தில் நெல்மணிகள் தண்ணீரில் மூழ்கி வீணானது தற்போது ஒரு நெல்மணி கூட வீணடிக்கப்படாத சூழலை அரசு உருவாக்கிக் கொடுத்துள்ளதாகவும், உணவுப் பொருட்களின் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த தமிழக முதல்வர் உணவுத்துறை அமைச்சர் ஆன தனது தலைமையில் குழு ஒன்றை அமைத்துள்ளதாகவும் எந்த உணவுப் பொருள் விலை உயர்ந்தாலும் அவற்றை வாங்கி பொதுமக்களுக்கு குறைந்த விலையில் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அரிசி விலை உயர் ந்தால் அதை கட்டுப்படுத்தவும் அரசு நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார்.

சார்ந்த செய்திகள்