சக்கரபாணி போல் எல்லா சட்டமன்ற உறுப்பினர்களும் இருந்துட்டா... திமுக ஆட்சியை அசைக்க முடியாது என்று அமைச்சர் கே.என். நேரு தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டத்தில் உள்ள பல்வேறு திட்டங்களை துவக்கி வைப்பதற்காக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை அமைச்சர் கே.என். நேரு கலந்து கொண்டார். இதில் திண்டுக்கல் மாநகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளுக்கு 132 கோடியில் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்திற்காக திண்டுக்கல்லில் அமைச்சர் ஐ. பெரியசாமி, அமைச்சர் கே.என். நேரு ஆகியோர் அடிக்கல் நாட்டினார்கள். அதன்பின் ஒட்டன்சத்திரம் புறவழிச் சாலையில் உள்ள கொல்லம்பட்டியில் ஒட்டன்சத்திரம் நகராட்சி, இரண்டு பேரூராட்சி மற்றும் ஏழு ஊராட்சி ஒன்றியங்களில் இருக்கக்கூடிய 1422 ஊரக குடியிருப்புகளுக்காக 1368 கோடி மதிப்பீட்டில் புதிய காவிரி கூட்டுக் குடிநீர் திட்டங்கள் மற்றும் ஒட்டன்சத்திரம் நகராட்சியில் 3.90 கோடி மதிப்பீட்டில் டில்கசடு கழிவு ஆலைக்கும் அமைச்சர்கள் கே.என். நேரு, ஐ. பெரியசாமி, சக்கரபாணி ஆகியோர் அடிக்கல் நாட்டினார்கள்.
இதில் பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி. செந்தில்குமார் மற்றும் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி, எஸ்.பி. பாஸ்கரன், நகர்மன்றத் துணைத் தலைவர் வெள்ளைச்சாமி மற்றும் நகராட்சி கவுன்சிலர்கள் உள்பட அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் பேசிய அமைச்சர் கே.என். நேரு, “ஒட்டன்சத்திரம் தொகுதிக்காக புதிய காவிரி குடிநீர் திட்டத்திற்கு 17 ஏக்கர் இடம் இருந்தால் மட்டுமே செயல்படுத்த முடியும். எனவே அதை யோசனை செய்வோம் என்று அமைச்சர் சக்கரபாணியிடம் கூறியிருந்தேன். அடுத்த நாளே சொந்த செலவில் அரவக்குறிச்சி அருகே 17 ஏக்கர் நிலத்தை தனது சொந்த பணத்தில் வாங்கி அதை பதிவு செய்து துறை செயலாளரிடம் ஒப்படைத்துவிட்டார். அதேபோல் ஒட்டன்சத்திரம் நகராட்சிக்கு உரக் கிடங்கு அமைக்க வேண்டும் எனில் 20 ஏக்கர் நிலம் இருந்தால் மட்டுமே சாத்தியம் உண்டு என்று கூறியபோது, அதையும் உடனே காப்பிலியப்பட்டி அருகில் தனது சொந்த செலவில் 20 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டு வாங்கி கொடுத்து இருக்கிறார்.
இப்படி இந்த இரண்டு நிகழ்ச்சிகளையும் கண்டு எங்கள் உயரதிகாரிகளே ஆச்சரியப்பட்டு அசந்து போனார்கள். அதனால்தான் தொகுதி மக்கள் மனதில் தொடர்ந்து ஆறு முறையும் இடம் பிடித்தார். இனி ஏழாவது முறையும் அவர்தான். ஆனால் சக்கரபாணி அமைச்சராக இருந்தாலும் கூட நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் சாமிநாதனை கொண்டு வந்து ரோடு போட்டுவிட்டார். அதுபோல் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் இருந்தபோது எல்லாத்துக்கும் ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் என்றால் இவர் நாளு ஆரம்ப சுகாதார நிலையத்தை கொண்டு வந்துவிட்டார். நான் கூட்டுறவுத்துறை அமைச்சராக இருக்கும்போது எல்லாருக்கும் இரண்டு கட்டடம் கொடுத்தால் இவருக்கு மட்டும் 20 கட்டடம். அதுபோல் நான் ஒரு மாதம்தான் வேளாண்மைத்துறை அமைச்சராக இருந்தேன். அக்மார்க் சோழன் ஆராய்ச்சி நிலையத்தையும் கொண்டு வந்துவிட்டார்.
அந்த அளவுக்கு தொகுதி மேல் பற்றும் பாசமும் வைத்திருக்கிறார். அதுபோல் நமது உணவு அமைச்சர் எல்லா பக்கமும் வந்து போனாலும் கூட ஒட்டன்சத்திரம் தொகுதியை கவனிக்கிற மாதிரி எல்லா சட்டமன்ற உறுப்பினர்களும் இருந்துட்டா... திமுக ஆட்சியை அசைக்க முடியாது. அந்த அளவுக்கு பணியாற்றுகிறீர்கள். நாங்கள் உங்களைப் பார்த்து கத்துக்குறோம். எப்படி ஐ.பி. திண்டுக்கல்லை பார்த்து வளர்க்கிறாரோ, அதேபோல் சக்கரபாணியும் பார்க்கிறார். அந்த அளவுக்கு திருச்சியையும் உங்களுக்கு இணையாக கொண்டு வருவோம்” என்று கூறினார்.