தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில், நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என். நேரு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “சென்னையில், 19 இடங்களில் மட்டும் இன்னும் மழைநீர் அகற்றப்படாமல் இருக்கிறது. வரும் 11 ஆம் தேதிக்குள் அனைத்து பணிகளையும் முடித்து விட வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னையில், தினசரி 4,600 லாரிகள் மூலம் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. 400க்கும் மேற்பட்ட மாநகராட்சி பள்ளிகளில் 6 இடங்களில் மட்டும்தான் வகுப்பறைகள் சுத்தம் செய்யப்படவில்லை.
சென்னை நகரம் கிட்டத்தட்ட இயல்பு நிலைக்கு வந்துவிட்டது. பிற மாவட்டங்களில் வந்த 2,500 பணியாளர்கள் சென்னையில் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். குப்பைகளை அடுத்த 2 நாட்களுக்குள் அகற்ற வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்று கூறினார்.