Skip to main content

“முதல் பிரச்சாரக் கூட்டம் மாபெரும் வெற்றிக்கான அறிகுறியாக இருக்கும்” - அமைச்சர் கே.என்.நேரு

Published on 20/03/2024 | Edited on 20/03/2024
Minister KN Nehru said   first campaign meeting will be a sign of great success

நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19-ந்தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கலும் இன்று தொடங்கியது. திமுக மற்றும் அதன் கூட்டணி சார்பில் தொகுதி பங்கீடுகள் அனைத்தும் நிறைவடைந்து விட்டன. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியை தவிர மற்ற அனைத்து கூட்டணி கட்சிகளும் தங்களுடைய வேட்பாளர்களையும் அறிவித்து விட்டனர்.

திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் மகனும், மதிமுகவின் முதன்மைச் செயலாளருமான துரை வைகோ போட்டியிடுகிறார். பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதியில் திமுக நேரடியாக போட்டியிடக்கூடிய நிலையில், அந்தத் தொகுதியில் திமுக முதன்மை செயலாளரும், நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே.என். நேருவின் மகன் அருண் நேரு போட்டியிடவுள்ளார்.

இந்த நிலையில் திருச்சி மற்றும் பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து வரும் 22-ந் தேதி மாலை திருச்சி மாவட்டம் சிறுகனூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் செய்ய உள்ளார். அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த ஏற்பாடுகளை அமைச்சர் கே.என்.நேரு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, “தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். திருச்சியில் இருந்து தொடங்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கான முதல் பிரச்சார கூட்டம் மாபெரும் வெற்றிக்கான அறிகுறியாக இருக்கும் என தெரிவித்தார்.

2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு திருச்சி மாவட்டம் சிறுகனூரில் மாபெரும் பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதுவே திமுகவின் முதல் தேர்தல் பிரச்சாரக் கூட்டமாக அமைந்திருந்தது. இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தலுக்கும் சிறுகனூரில் மிகப்பெரிய பொதுக்கூட்டத்தை ஏற்பாடு செய்து அங்கிருந்து தேர்தல் பிரச்சாரத்தை தி.மு.க தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில், மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, மாநகர செயலாளர் மேயர் அன்பழகன், மதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் வெல்லமண்டி சோமு, காங்கிரஸ் வடக்கு மாவட்ட தலைவர் திருச்சி கலை உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

சார்ந்த செய்திகள்