தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் திருத்தச் சட்டம் தொடர்பான பயிலரங்கம் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இதில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு கலந்து கொண்டார். நிகழ்வின் மேடையில் பேசிக் கொண்டிருந்த கே.என். நேரு தூங்கி வழிந்த அதிகாரி ஒருவரை சுட்டிக்காட்டி பேசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
நிகழ்வில் பேசிய அமைச்சர் கே.என். நேரு, ''வீட்டில் இருப்பவர்களை போய் மிரட்டுவதை விட ஊரில் வியாபாரம் செய்பவர்கள், பெரிய பணக்காரன் ஆகியோர்களிடம் வரி வசூலை ஆரம்பித்தால் அதுதான் நமக்கு சரியாக இருக்கும். இங்கு கமிஷனர் ராதாகிருஷ்ணன் கூட இருக்கிறார். எனக்கு தெரிந்து பெரிய நிறுவனங்கள், பல நிறுவனங்கள் கோடிக் கணக்கில் வரி வருவாய் கட்டாமல் ஸ்டே வாங்கி வைத்துள்ளார்கள். பெரிய பெரிய நிறுவனங்கள் வரி தருவதில்லை. ஆனால் நாம் குடிசையில் இருப்பவர்களிடமும், வீட்டில் இருப்பவர்களிடம் சென்று வரி கேட்டுக் கொண்டிருக்கிறோம். இதற்கு நமது செயலாளரும் (ராதாகிருஷ்ணன்) சரியான முடிவு எடுத்தாக வேண்டும்.
வசதி படைத்தவர்கள் இந்த வரியை கட்டியாக வேண்டும். எனவே பொதுமக்களுடன் நல்ல உறவோடு, அதே நேரத்தில் அரசாங்கம் சொல்கின்ற செயலை செய்வதற்காகத்தான் இந்த சட்டங்களை கொண்டு வந்திருக்கிறோம். இதை நீங்கள் சரியாக நல்ல முறையில்... என பேசிக் கொண்டிருந்த அமைச்சர் கே.என். நேரு, அரங்கில் தூங்கிக் கொண்டிருந்த அதிகாரியை பார்த்து... ''அங்க பாருங்க ஒருத்தர் தூங்குறாரு. பக்கத்தில் இருக்கவங்க எழுப்புங்கயா. தூங்குகிறார் பாருங்க. இங்கேயே நீ தூங்குற. நீ எந்த ஊருக்காரங்க... நல்லா இருக்கா. இவ்வளவு பேருக்கு முன்னால தப்பா போகும். இந்த நிகழ்ச்சிய அவங்கவங்க இவ்ளோ கஷ்டப்பட்டு கொண்டு வந்திருக்காங்க தூங்குகிறீர்களே நியாயமா இது'' என்றார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர், ''இங்கு இருக்கக் கூடிய புத்தகத்தை நன்றாக படியுங்கள். அதேபோல் கோடு போட்டதை போல் இந்த சட்டத்தை நிறைவேற்றவும் முடியாது. ஆனால் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும். அதற்கான வழிமுறைகள் ஏதுவாக இருக்க வேண்டும். சமாதான முறையில் எல்லாவற்றையும் சரி செய்து கொண்டு வர வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். இந்த கூட்டம் கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது எனக்கு பெருமை'' என்றார்.