திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட சின்னாளபட்டி, மணலூர், சித்தரேவு, சித்தையன்கோட்டை, வீரக்கல், பஞ்சம்பட்டி, செட்டியபட்டி, முருகம்பட்டி, உட்பட 13 கிராமங்களில் உள்ள மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா சின்னாளபட்டி தேவாங்கர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
இந்த விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தலைமை தாங்கினார். திமுக கிழக்கு மாவட்ட பொருளாளர் சத்தியமூர்த்தி தலைமை, செயற்குழு உறுப்பினர் ஆத்தூர் நடராஜன் ஒன்றிய பெருந்தலைவர் மகேஸ்வரி, ஒன்றிய செயலாளர்கள் பாறைப்பட்டி ராமன், முருகேசன், ஆசிரியர் காசிராஜன், தலைமை ஆசிரியர் ஞானசேகரன், பேரூராட்சி மன்றத் தலைவர் பிரதீபா, துணைத் தலைவர் ஆனந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். திண்டுக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நசாரூதீன் வரவேற்றுப் பேசினார்.
விழாவில் மாணவ மாணவியருக்கு 874 விலையில்லா மிதிவண்டிகளை வழங்கிவிட்டு மாணவர்கள் மத்தியில் பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி, “இந்த விழா நடக்கும் தேவாங்கர் மேல்நிலைப்பள்ளி மிகவும் பழமையான பள்ளி. சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவ மாணவியருக்கு கல்வியை வழங்கியது இந்த பள்ளிதான். சேவை மனப்பான்மையுடன் செயல்பட்டு வரும் தேவாங்கர் மேல்நிலைப்பள்ளியின் செயல்பாடுகள் பாராட்டுக்குரியது. கைத்தறி நெசவாளர்கள் அதிகம் வசிக்கும் இந்த பகுதியில் செயல்பட்டு வரும் தேவாங்கர் மேல்நிலைப்பள்ளியில் பயின்ற மாணவர்கள் இன்று தமிழகம் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் உயர் பதவியில் உள்ளார்கள். பள்ளியைக் கொண்டு வந்த எல்.கே.பி. லகுமையா செட்டியார், டி.எஸ்.வி. தியாகராஜன், ஏ.எம்.டி. நாச்சியப்பன் போன்றவர்களின் அர்ப்பணிப்பால் தேவாங்கர் மேல்நிலைப்பள்ளி உருவாகி இன்று உயர்ந்த நிலையில் உள்ளது.
தேவைப்படும் என்றால் சின்னாளபட்டியில் வசிக்கும் கைத்தறி நெசவாளர் குடும்பத்தில் உள்ள மாணவ மாணவிகள் நலன் கருதி தேவாங்கர் பள்ளி வளாகத்தில் கல்லூரியைக் கூட கொண்டுவர நான் தயாராக உள்ளேன். காரணம் நான் மாணவ பருவத்திலிருந்து இந்த பள்ளியை பார்த்து வருகிறேன். பல விளையாட்டு போட்டிகளை நடத்தி திறமையான விளையாட்டு வீரர்களையும், சிறந்த ஆசிரியர்களையும் உருவாக்கியது தேவாங்கர் மேல்நிலைப்பள்ளி. இந்த பள்ளியில் பயிலும் மாணவர்கள் ஜாதி, மத, இன வேறுபாடின்றி ஒற்றுமையுடன் படித்து மேன்மையான நிலைக்கு வரவேண்டும்” என வேண்டுகோள் விடுத்தார். நான் ஆத்தூர் சட்டமன்றத் தொகுதியில் 1989ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்ட நாள் முதல் இன்றுவரை 33 வருடங்களாக எனக்கு உறுதுணையாக இருப்பவர்கள் சின்னாளபட்டியில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் கைத்தறி நெசவாளர்கள்தான். இன்று அமைச்சராக உள்ளேன், இதை நான் என்றும் மறக்கமாட்டேன். சின்னாளபட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் நலத்திட்டங்களை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்று கூறினார்.