Skip to main content

“ஓட்டுநர் ஓய்வின்றி கார் ஓட்டியதால் குமுளி மலைச்சாலையில் விபத்து” - அமைச்சர் ஐ.பெரியசாமி

Published on 24/12/2022 | Edited on 24/12/2022

 

minister i periyasamy talk about theni car incident

 

தேனி மாவட்டத்தில் உள்ள குமுளி மலைச்சாலையில் நேற்று நள்ளிரவு ஏற்பட்ட கோர விபத்தில் 8 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதையொட்டி ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும், விபத்தில் படுகாயமடைந்த இரண்டு நபர்களையும் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். 

 

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அமைச்சர் ஐ.பெரியசாமி, “இந்த விபத்தில் படுகாயமடைந்தவர்களுக்கு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. விரைவில் முதலமைச்சர் அறிவிப்பார். குமுளி மலைச்சாலை விபத்து ஏற்படக்கூடிய ஆபத்தான வழித்தடம் இல்லை. சாதாரண வழித்தடம் தான். இந்த விபத்து மிக மிக எதிர்பாராதது. கார் ஓட்டுநர் இரண்டு நாட்களாக திருப்பதி சென்று வந்தவர். ஓய்வின்றி மீண்டும் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் சென்றுள்ளார். அதனால் திரும்பும் வழியில் ஏற்பட்ட தூக்க அசதியில் இந்த விபத்து ஏற்பட்டிருக்கக் கூடும் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

 

minister i periyasamy talk about theni car incident

 

விபத்தில் வேறு எந்த வாகனமும் மோதவில்லை. கட்டுப்பாட்டை இழந்த கார் தானாக உயரமான இடத்தில் இருந்து ராட்சத குழாய்கள் மீது விழுந்துள்ளது. முதல்வர் ஸ்டாலின் உத்தரவுப்படி நானும் தேனி மாவட்டச் செயலாளரும் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்திக்க வந்தோம். பாதிப்பு எங்கு நடந்தாலும் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு அவர்களுக்கு எல்லா விதத்திலும் உதவி செய்யும். மகரவிளக்கு பூஜைக்காக வரும் ஐயப்ப பக்தர்களுக்கு குமுளி மலைச்சாலையில் சாலை வசதி செய்வது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார். கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ராமகிருஷ்ணன், ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் உட்பட கட்சிப் பொறுப்பாளர்கள் பலர் உடனிருந்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்