திண்டுக்கல் மாநகரில் உள்ள கலைஞர் மாளிகையில் ஊரகவளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமியை பொதுமக்கள் சந்தித்து தங்களின் பிள்ளைகள் உயர்கல்வி கற்பதற்கான கோரிக்கை மனுக்களை கொடுத்து தீர்வு பெற்றனர். அப்போது செம்மடைப்பட்டி, தாத்தாகவுன்டனூர், கஸ்தூரிபா காலனி, சித்தயகவுன்டனூர், பொட்டிநாயக்கன்பட்டி கிராம மக்கள் சார்பாக ஒன்றியகுழு உறுப்பினர் விவேகானந்தன் தலைமையில் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.
அந்த மனுவில் திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில் செம்மடைப்பட்டியில் மேம்பாலம் அமைக்கப்படுவதாகவும் அருகில் உள்ள கிராமங்களான செம்மடைப்பட்டி, தாத்தாகவுன்டனூர், கஸ்தூரிபா காலனி, சித்தயகவுன்டனூர், பொட்டிநாயக்கன்பட்டி கிராம மக்கள் செல்ல பாலத்தின் அடியில் அமைக்கப்படும் தரைப்பாலம் உயரம் குறைவாக அமைக்கப்படுவதாகவும், வாகனங்கள் செல்லும் அளவிற்கு பாலத்தை உயர்த்தி அமைக்க வேண்டுமென கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.
இதனையடுத்து உடனடியாக அமைச்சர் ஐ.பெரியசாமி, சம்மந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்புகொண்டு பொதுமக்களின் நலனுக்காக மேம்பாலத்தின் அடியில் அமைக்கப்படும் தரைப்பாலத்தை உயர்த்தி அமைக்க வேண்டுமென கூறினார். அதன்பின்னர் ஆத்தூர் தொகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகளுடன் அமைச்சர் ஐ.பெரியசாமியை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர். அப்போது பொதுமக்கள் மத்தியில் பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி, தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் நலத்திட்ட பணிகளை ஆத்தூர் தொகுதியில் தொடர்ந்து செயல்படுத்த முடியவில்லை. விதிகள் தளர்ந்தவுடன் உடனடியாக அனைத்து பகுதிகளிலும் நலத்திட்ட பணிகள் தொடர்ந்து நடைபெறும்.
தமிழகத்தில் கிராம ஊராட்சிகளின் பொற்காலம் இப்போதுதான் உள்ளது. அதற்கு காரணம் திராவிட மாடல் ஆட்சி நாயகன்கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்தான். முத்தமிழ் அறிஞர் கலைஞர் முதல்வராக இருந்தபோது உள்ளாட்சிதுறை அமைச்சராக இருந்த மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சென்று ஊராட்சி நிலைகளை பார்வையிட்டதால் இன்று அவர் முதல்வராக பொறுப்பில் உள்ளார். கிராம ஊராட்சிகளின் முன்னேற்றத்திற்கு அதிக முக்கியத்துவம் அளித்து நிதி ஒதுக்கீடு செய்து வருவதால் இன்று கிராமங்கள் தோறும் தார்சாலைகள், தெருவிளக்கு வசதிகள், குடிதண்ணீர் வசதிகள் 100 சதவிகிதம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மண் சாலைகள் கூட முதலமைச்சரின் கிராமப்புற சாலைகள் மேம்பாட்டுத் திட்டம் மூலம் தார்சாலைகளாக மாறிவருவதால் கிராமப்புற விவசாயிகள் பயனடைவதோடு, பள்ளிக்குச் செல்லும் மாணவர்களும் சிரமமின்றி பள்ளிக்குச் சென்று கல்வி கற்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது” என்று கூறினார்.