காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து திருச்சி விமான நிலையத்தை முற்றுகையிட்டு அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தலைமையில், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு, ரெங்கநாதன் உள்பட பல்வேறு விவசாய சங்கத்தினர், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் போராட்டம் நடத்தினர்.
விமான நிலையத்திற்குள் நுழைய முயன்ற அனைவரையும் போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். தினகரன், அய்யாக்கண்ணு, ரெங்கநாதன் உள்பட 1,653 பேர் கைது செய்யப்பட்டனர். தினகரனை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றிய போது, அவரது ஆதரவாளர்கள் போலீஸ் வேன் மீது ஏறி நின்று தங்களையும் வேனில் ஏற்ற வேண்டும். அல்லது டிடிவி தினகரனை விடுதலை செய்ய வேண்டும் என்று கோஷம் எழுப்பினர். வேனின் முன்பகுதியில் ஏறி நின்று போராடியதால் வேன் கண்ணாடி உடைந்தது. பின்னர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை அங்கிருந்து கலைந்து போக செய்தனர். மேலும் கைதான அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
இந்த சம்பவம் குறித்து கொட்டப்பட்டு கிராம நிர்வாக அதிகாரி ஜெயலட்சுமி, திருச்சி விமான நிலைய போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் டி.டி.வி.தினகரன், விவசாயிகள் சங்க தலைவர்கள் அய்யாக்கண்ணு, ரெங்கநாதன், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் உள்பட 1,653 பேர் மீது திருச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். (143) அனுமதியின்றி கூடுதல், (240) பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல் மற்றும் 341 (முறைகேடாக மறித்தல்) ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அவர்களில் சிலர் மீது போலீஸ் வேனின் கண்ணாடியை உடைத்ததாகவும் தனியாக ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.