Skip to main content

குளத்தில் கண்டெடுக்கப்பட்ட புத்தர் சிலை!

Published on 04/09/2018 | Edited on 04/09/2018
Buddha


பேராவூரணியில் அபூர்வ வகை வெண்கலத்தினாலான, புத்தர் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

பேராவூரணி பேரூராட்சி, செங்கொல்லை பகுதியை சேர்ந்தவர் முருகேசன். இவர் செவ்வாய்கிழமை காலை, அருகில் உள்ள நாட்டாணிக்கோட்டை முனிக்கோயில் குளத்தில் குளிக்கச் சென்றார். அப்பொழுது அவரது காலில் ஏதோ பொருள் இடறியது. இதையடுத்து அவர் அதை எடுத்துப் பார்த்தபோது, சுமார் அரை அடி உயரத்தில், ஒன்றரை கிலோ எடையுள்ள வெண்கலத்தால் ஆன அபூர்வ வகை புத்தர் சிலை என்பது தெரியவந்தது.

இதையடுத்து முருகேசன் அந்த புத்தர் சிலையை, பேராவூரணி வட்டாட்சியர் அலுவலகம் சென்று, வட்டாட்சியர் எல்.பாஸ்கரனிடம் ஒப்படைத்தார். இந்த சிலை எப்படி இந்த குளத்திற்கு வந்தது. வேறு எங்கேனும் திருடப்பட்டு, இங்கு வந்து போடப்பட்டதா அல்லது பழங்காலத்தை சேர்ந்த புராதன சிலையா. இப்பகுதியில் வழிபாட்டில் இல்லாத புத்தர்சிலை இங்கு கிடைத்த மர்மம் என்ன என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

"வெறுப்பு, பயங்கரவாதத்தை சார்ந்த சக்திகள் இன்றும் உள்ளன" - பிரதமர் மோடி!

Published on 26/05/2021 | Edited on 26/05/2021

 

narendra modi

 

புத்தமதத்தைத் தோற்றுவித்த கௌதம புத்தரின் பிறந்தநாளன இன்று, (26.05.2021) உலகமெங்கும் வாழும் புத்த மதத்தைச் சார்ந்தவர்களால் புத்த பூர்ணிமாவாக கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி பிரதமர் மோடி மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர், கரோனாவால் இறந்தவர்களின் உறவினர்களுக்கு இரங்கல்களையும் தெரிவித்தார்.

 

பிரதமர் மோடி பேசியது வருமாறு;-

 

ஒவ்வொரு நாளும் மற்றவர்களுக்குச் சேவை செய்வதற்காக, தன்னலமின்றி தங்கள் உயிரைப் பணயம் வைத்துக்கொண்டிருக்கும் நமது முன்கள சுகாதாரப் பணியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோருக்கு மீண்டும் ஒருமுறை வணக்கம் செலுத்துகிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கும், தங்களது அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கும் எனது இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். கரோனா தொற்றுநோயைப் பற்றி இப்போது நமக்கு நல்ல புரிதல் உள்ளது. இது போராடுவதற்கான நமது யுக்தியைப் பலப்படுத்துகிறது. உயிரைக் காப்பாற்றுவதற்கும், தொற்றுநோயைத் தோற்கடிப்பதற்கும் முக்கியமானதான தடுப்பூசி நம்மிடம் உள்ளது. கரோனா தடுப்பூசிகளில் பணியாற்றிய நமது விஞ்ஞானிகள் பற்றி இந்தியா பெருமிதம்கொள்கிறது.

 

கடந்த ஆண்டில், பல தனிநபர்களும் அமைப்புகளும் சந்தர்ப்பத்திற்கு ஏற்ப முன்வந்து துயரத்தைக் குறைக்க, தங்களால் முடிந்த அனைத்தையும் செய்ததைப் பார்த்தோம். உலகெங்கிலும் உள்ள புத்த அமைப்புகள் மற்றும் புத்த தர்மத்தைப் பின்பற்றுபவர்கள், மருத்துவ உபகரணங்கள் மற்றும் பொருட்களில் பெருந்தன்மையான பங்களிப்பை வழங்கினார்கள்.

 

கரோனாவை எதிர்த்துப் போராடுவதற்காக அனைத்தையும் செய்யும்போது, மனிதகுலம் எதிர்கொள்ளும் மற்ற சவால்கள் மீதான பார்வையை இழக்கக்கூடாது. மனிதத்திற்கு எதிரான சவால்களில் ஒன்று காலநிலை மாற்றம். வானிலை முறைகள் மாறிக்கொண்டே இருக்கின்றன. பனிப்பாறைகள் உருகுகின்றன. ஆறுகளும் காடுகளும் ஆபத்தில் உள்ளன. நம் கிரகம் காயத்தோடு  இருக்க நாம் அனுமதிக்க முடியாது. பாரிஸ் ஒப்பந்த இலக்குகளை நிறைவேற்றும் பாதையில் உள்ள, வேறு சில பெரும் பொருளாதாரங்களில் இந்தியாவும் ஒன்று. நிலையான வாழ்க்கை என்பது சரியான வார்த்தைகள் பற்றியது மட்டுமல்ல; சரியான செயல்களைப் பற்றியது.

 

புத்தரின் வாழ்க்கை அமைதி, நல்லிணக்கம் மற்றும் இணைந்து வாழ்வது பற்றியது. வெறுப்பு, பயங்கரவாதம் மற்றும் இரக்கமில்லா வன்முறை ஆகியவற்றை சார்ந்தே தனது இருப்பை கொண்டிருக்கும் சக்திகள் இன்றும் உள்ளன. இத்தகைய சக்திகள் தாராளமய ஜனநாயகக் கொள்கைகளை நம்பவில்லை. மனிதத்தை நம்புபவர்கள் ஒன்றுபட வேண்டும். பயங்கரவாதத்தை தோற்கடிக்க வேண்டும்.

இவ்வாறு பிரதமர் மோடி உரையாற்றினார். 

 

 

Next Story

மும்பையில் தியானம் செய்துகொண்டிருந்த துறவிக்கு நடந்த கொடூரம்

Published on 14/12/2018 | Edited on 14/12/2018

 

bud

 

மும்பையின் மேற்கு பகுதியில் உள்ள ராம்தேகி வனப்பகுதியில் தியானம் செய்து கொண்டிருந்த 35 வயது புத்த மத துறவியை சிறுத்தை ஒன்று அடித்து கொன்றுள்ளது. சிறுத்தை புலி நடமாட்டம் அதிகம் உள்ள இப்பகுதியை ஏற்கனவே பாதுகாக்கப்பட்ட இடமாக வனத்துறை அறிவித்துள்ளது. ஆபத்தான பகுதி என்ற அதிகாரிகளின் எச்சரிக்கையையும் மீறி 3 புத்த துறவிகள் தியானம் செய்ய சென்றுள்ளனர். அதில் ஒருவரை சிறுத்தை தாக்கி கொன்றுள்ளது. இதனை பார்த்த மற்ற இருவரும் தப்பித்து சென்று காவல்துறையிடம் தகவல் கூறியுள்ளனர். அதன் பின் அங்கு வந்த காவல்துறையினர் அவரது உடலை தேடி கண்டுபிடித்தனர். 825 ச.கி.மீட்டர் பரப்பளவு கொண்ட இந்த வனப்பகுதியில் இந்த மாதம் மட்டும் இது போன்ற 5 சம்பவங்கள் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.