‘தமிழகத்தில் திமுக ஆட்சியின் போது தமிழகம் முழுவதும் 25 லட்சம் வீட்டு மனை பட்டாக்களை வழங்கி சாதனை படைத்தது திமுக அரசு’ என அமைச்சர் ஐ. பெரியசாமி தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார் சத்திரம் ஒன்றியம் கொத்தப்புள்ளி ஊராட்சி கதிர் நரசிங்க பெருமாள் கோவில் சமுதாயக் கூடத்தில் ரெட்டியார் சத்திரம் ஒன்றியத்தை சேர்ந்த பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனைப் பட்டாக்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் பூங்கொடி தலைமை தாங்கினார். ரெட்டியார் சத்திரம் ஒன்றிய பெருந்தலைவர் சிவகுருசாமி, திண்டுக்கல் கிழக்கு மாவட்ட பொருளாளர், சத்தியமூர்த்தி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் தண்டபாணி, ஆத்தூர் நடராஜன், ஊராட்சி மன்றத் தலைவர் சுந்தரி அன்பரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோட்டாட்சியர் கமலக்கண்ணன் தலைமை தாங்கினார்.
இந்த விழாவில், 217 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனைப் பட்டாக்களை வழங்கிவிட்டு அவர்கள் மத்தியில் பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, “தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் மக்களுக்கான நலத்திட்டங்கள் இல்லம் தேடி வருகிறது. கடந்த 12 வருடங்களுக்கு முன்பு முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் முதல்வராக இருந்தபோது நான் வருவாய்த்துறை அமைச்சராகப் பதவியில் இருந்தேன். அப்போதைய துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின் படி தமிழகத்தில் மட்டும் 25 லட்சம் பேருக்கு இலவச வீட்டு மனைப் பட்டாக்களை வழங்கி சாதனை படைத்தோம். அதன்பின்பு திமுக ஆட்சியில் ஏழை எளிய மக்களுக்கு முறையாக வீட்டு மனைப் பட்டாக்களை வழங்கி மீண்டும் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வரும் மக்களுக்கான நல்லாட்சியில் இன்று ரெட்டியார் சத்திரம் ஒன்றியத்தை சேர்ந்த 217 ஏழை எளிய மக்களுக்கு வீட்டு மனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளது.
இது அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும். கலைஞர் மற்றும் காங்கிரஸ் பேரியக்கத்தின் தலைவராக இருந்த அன்னை சோனியா காந்தி அவர்களின் சீரிய முயற்சியால் தமிழகத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டதால் கிராமங்களில் உள்ள ஏழை எளிய மக்கள் பயனடைந்தார்கள். அதன்பின்னர் கடந்த 10 வருடங்களாக மத்தியில் ஆளும் பாஜக அரசு 100 நாள் வேலைத் திட்டத்தை முடக்கும் நோக்கோடு செயல்பட்டு வந்தது. மீண்டும் தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைந்தவுடன் 100 நாள் வேலைத்திட்டம் புத்துயிர் பெற்று தற்போது தங்கு தடையின்றி 100 நாள் வேலைத்திட்டம் நடைபெற்று வருகிறது. அதற்கான கூலியும் உயர்த்தி கொடுக்கப்பட்டுள்ளது. உடல்நிலை சரியில்லாத நிலையிலும் ஏழை எளிய மக்கள் பயன்பெற வேண்டும் என்ற நோக்கோடு இலவச வீட்டு மனைப் பட்டாக்கள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துள்ளேன். உயிருள்ள வரை ஆத்தூர் தொகுதி மக்களுக்கு அயராது உழைப்பேன்” என்று கூறினார்.