திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ரெட்டியார்சத்திரம் ஒன்றியம், கரிசல்பட்டியில் புதிதாகக் கட்டப்பட்ட புனித வனத்து அந்தோணியார் ஆலய திறப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு திண்டுக்கல் மறைமாவட்ட ஆயர் தாமஸ் பால்சாமி தலைமை தாங்கினார். பங்குத் தந்தை எர்னெஸ்ட் அந்தோணிசாமி முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கலந்துகொண்டார்.
புனித வனத்து அந்தோணியார் ஆலயத்தை அமைச்சர் ஐ.பெரியசாமி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். பின் அவர் பேசியதாவது; “திமுக தலைவர் வழியில் சிறுபான்மையின மக்களுக்கு அதிக அளவில் நலத்திட்டங்களை வழங்கி வருவது தி.மு.க. அரசு. தலைவர் ஸ்டாலின் வழியில் என்றும் சிறுபான்மையின மக்களுக்கு உறுதுணையாக இருப்பதோடு, அவர்கள் வைக்கும் கோரிக்கைகளையும் நிறைவேற்றிக் கொடுப்பேன்” என்று கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் ரெட்டியார்சத்திர ஒன்றிய பெருந்தலைவர் சிவகுருசாமி, முன்னாள் ஒன்றிய தலைவர் சத்தியமூர்த்தி உட்பட கட்சிப் பொறுப்பாளர்கள் மற்றும் ஊர் பொதுமக்களும் பெருந்திரளாகக் கலந்து கொண்டனர்.