திண்டுக்கல், தேனி தொகுதிகளில் போட்டியிடும் இரண்டு வேட்பாளர்களையும் அண்ணன் ஐ.பெரியசாமி வெற்றி பெற வைத்துவிடுவார்என்ற நம்பிக்கை எனக்கு இருக்கு என்று தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் லட்சுமிபுரத்தில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் பேசியிருந்தார். அதுபோல் திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியின் தி.மு.க. கூட்டணி சிபிஎம் வேட்பாளராக சச்சிதானந்தத்தை அறிவித்த உடனே மாநிலத் தலைவரான பாலகிருஷ்ணன் திண்டுக்கலில் உள்ள அமைச்சர் ஐ.பெரியசாமியைச் சந்தித்தார். அப்போது அதிக ஓட்டு வித்தியாசத்தில் சச்சிதானந்தத்தை வெற்றி பெற வைப்பேன் எனக் கூறியிருந்தார்.
அதைத் தொடர்ந்துதான் கட்சிபொறுப்பாளர்களை உசுப்பிவிட்டு தேர்தல் பணியில் அமைச்சர் ஐ.பி. ஆர்வம்காட்டி வந்தார். அதுபோல் தேனி மாவட்ட பொறுப்பு அமைச்சராக அமைச்சர் ஐ.பெரியசாமி இருந்து வருவதால் தேனி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளராக தங்க தமிழ்ச்செல்வனையும் வெற்றி பெறவைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஒவ்வொரு பகுதியிலும் உள்ள கட்சிப் பொறுப்பில் இருக்கும் உடன் பிறப்புக்களிடம் கருத்து வேறுபாடுகளை எல்லாம் மறந்து இந்தத் தேர்தலில் பணியாற்றுவதின் மூலம் தங்கத்தமிழ்ச்செல்வனை அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வந்தார்.
இந்த நிலையில்தான் தேனி பிரச்சாரத்திற்கு வந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் இத்தொகுதியில் போட்டி போடும் தங்கத்தமிழச்செல்வனை மூன்று லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தீர்கள் என்றால் தேனி தொகுதியில் தங்கி மக்களின் குறைகளையும், கோரிக்கைளையும் நிறைவேற்றி கொடுப்பேன் என்று கூறியிருந்தார். அதைத்தொடர்ந்து தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்த முதல்வர்தான் இரண்டு வேட்பாளர்களையும் அமைச்சர் ஐ.பெரியசாமி வெற்றி பெற வைப்பார் என்ற நம்பிக்கை இருக்கிறது என்று மேடையிலேயே இருந்த அமைச்சர்களான ஐ.பெரியசாமி மற்றும் சக்கரபாணி முன்னிலையில் கூறினார்.
அதைத் தொடர்ந்து தீவிரமாக தேர்தல் களத்தில் ஆர்வம் காட்டிய அமைச்சர் ஐ.பெரியசாமி திண்டுக்கல் தொகுதியில் சிபிஎம் வேட்பாளரின் சின்னமான அரிவாள், சுத்தியல், நட்சத்திரம் சின்னம் தொகுதி மக்கள் மத்தியில் அறிமுகம் இல்லாததால் அதை வாக்காள மக்களின் மனதில் பதிய வேண்டும் என்பதற்காக உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் சக்கரபாணி மற்றும் பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமார் ஆகியோருடன் ஆலோசனை செய்த அமைச்சர் ஐ.பெரியசாமி உடனே தொகுதியில் உள்ள கட்சிப் பொறுப்பாளர்களை உசுப்பிவிட்டு நகரம் முதல் பட்டி தொட்டி வரை அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்தை மக்களிடம் பதிய வைக்க வேண்டும் என்பதற்காக சின்னத்தை பிட் நோட்டீஸ் மூலமாகவும், விசிறிகளாகவும் தயார் செய்து வீடு வீடாக கொடுத்து பிரச்சாரம் செய்து மக்கள் மனதில் பதிய வைத்தனர்.
அதன் அடிப்படையில்தான் இரண்டு அமைச்சர்களின் தொகுதியில் தலா ஒரு லட்சம் ஓட்டுகளுக்குமேல் வாங்கி கொடுத்ததின் பேரில்தான் 4லட்சத்து 43 ஆயிரத்து 821 ஓட்டுக்கள் கூடுதலாக பெற்று தமிழகத்திலேயே மூன்றாம் இடத்தை பிடித்ததுடன் மட்டுமல்லாமல் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக கூட்டணியின் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் வேட்பாளர் முகமது முபாரக் தவிர, பா.ம.க. வேட்பாளர் திலகபாமா, நாம் தமிழர் கட்சி உட்பட அனைவருமே டெபாசிட் இழந்தும் இருக்கிறார்கள். அதுபோல் தேனி பாராளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் களமிறங்கி உள்ள தங்கத் தமிழ்ச்செல்வனையும் அதிக ஓட்டுக்களில் வெற்றிபெற வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தொகுதியில் இருக்கும் இரண்டு மாவட்டங்களிலிருக்கும் எம்.எல்.ஏ.க்களான சரவணக்குமார், கம்பம் ராமகிருஷ்ணன், மகாராஜன் மற்றும் உசிலம்பட்டி, சமயநல்லூர் தொகுதிகளில் உள்ள கட்சிப் பொறுப்பாளர்களிடம் ஆலோசனை செய்து தேர்தல் களத்தில் இறக்கி தீவிரமாக மக்கள் மத்தியில் ஆளும் கட்சியின் சலுகைகளையும், சாதனைகளையும் சொல்லி வாக்காள மக்களிடம் ஓட்டு கேட்டு வைத்ததின் பேரில்தான் 2லட்சத்து 78 ஆயிரத்து 825 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் தங்கத்தமிழ்ச்செல்வன் வெற்றி பெற்று இருக்கிறார்.
இதில் எதிர்த்து போட்டியிட்ட டிடிவி தினகரனைத் தவிர அதிமுக வேட்பாளர் நாராயணசாமி மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மதன் உட்பட பத்துக்கும் மேற்பட்ட சுயேட்சைகளும் டெபாசிட் இழந்து இருக்கிறார்கள். அந்த அளவுக்கு தேனி, திண்டுக்கல் தொகுதிகளில் போட்டியிட்ட தங்கத்தமிழ்ச்செல்வனையும், சச்சிதானந்தத்தையும் முதல்வர் சொன்ன ஒரு வார்த்தைக்காக அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்திருக்கிறார். அந்த அளவுக்கு முதல்வரின் நம்பிக்கைக்கு உரியவராக அமைச்சர் ஐ.பெரியசாமி இருந்து வருகிறார் என்று கட்சியினரே பேசி வருகின்றனர்.