நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று தமிழ்நாடு அரசின் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான 7.5% உள் இட ஒதுக்கீட்டின் கீழ் நடந்த மருத்துவக் கலந்தாய்வில் கலந்துகொண்டு பல்வேறு மருத்துவக் கல்லூரிகளைத் தேர்வு செய்து ஊருக்குத் திரும்பியுள்ள கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் சுருதி, ஜனனி, சுபதாரணி ஆகியோருடன் பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் ஆகியோர் சுற்றுச்சூழல் துறை அமைச்சரை சந்தித்தபோது மாணவிகளுக்குப் பொன்னாடை அணிவித்துப் பாராட்டினார்.
அதேபோல ஆலங்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்து 7.5% உள் இட ஒதுக்கீட்டில் மருத்துவம் படிக்கச் செல்லும் கீழாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவர் மனோஜ் அவரது பெற்றோருடன் அமைச்சரைச் சந்தித்தபோது அவரையும் பாராட்டி பொன்னாடை அணிவித்தார். தொடர்ந்து மாணவர்களிடம் பேசும்போது, “உங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் தமிழ்நாடு அரசு செய்து கொடுக்கிறது. அதேபோல முதலமைச்சர் கொண்டு வந்த சிறப்புத் திட்டமான உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கான மாதம் ரூ.1000 உங்களுக்கும் கிடைக்கும். அனைத்து அரசுத் திட்டங்களையும் பயன்படுத்திச் சிறந்த மருத்துவர்களாக வரவேண்டும். கிராமப்புறங்களிலிருந்து போகிறோம், புதிய இடம் என்ற அச்சம் எதுவும் உங்களுக்கு வேண்டாம்'' என்றார். அதேபோல ஆசிரியர்களிடம், இதுபோல நிறைய மாணவ, மாணவிகளை உருவாக்க வேண்டும் என்றார்.